பக்கம்:பொன் விலங்கு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பொன் விலங்கு

அனுப்பியிருந்தவர்களின் முகவரி டைப் செய்யப்பட்டு இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், அதை எப்படி எடுப்பது? என்ற தயக்கத்தோடு அவள் திரையை விலக்கி முன்பக்கத்து அறைக்குள் எட்டிப் பார்க்கவும் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக்கொண்டே அப்பா வெளிப்புற வராந்தாவுக்குச் செல்லவும் சரியாயிருந்தது. பதறும் கால்களால் பூனைபோல் அடியெடுத்து வைத்து அப்பாவின் மேஜையருகே சென்று டைப் செய்த காகிதங்களை மெதுவாகப் புரட்டினாள் அவள். அந்த முகவரிகள் மேலாகவே இருந்தன. மூன்றே மூன்று வரிகளில் பெயர் ஊர் என்ற வரிசைப்படி இருந்த சத்தியமூர்த்தியின் முகவரியை நன்றாக ஞாபகத்தில் பதித்துக் கொண்டு உள்ளே ஒடிப்போய் உறையில் அதை அவசர அவசரமாக எழுதினாள். அப்படி எழுதும்போதே அந்த முகவரி அவள் மனத்தில் நிரந்தர ஞாபகமாகப் பதிந்து கொண்டது. பங்களா வாசலில் எதிர்ப்புறம் மரத்தடியில் தபால்பெட்டி உண்டு. வேறு யாரிடமும் கொடுப்பதற்கில்லை என்பதால் அப்பாவுக்குத் தெரியாதபடி தானே நேரில் போய்த் தபாலில் சேர்த்துவிட்டு வர எண்ணி அப்பா எங்கே இருக்கிறார் என்று பார்த்தாள் பாரதி, வராந்தாவின் மேலக்கோடியில் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. செடிகளின் மறைவில் பதுங்கிப் பதுங்கி வெளியேறித் தெருவுக்கு வந்தாள் அவள். அப்போதுதான் தபால் பெட்டியைத் திறந்து மஞ்சள் பையில் கடிதங்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான் தபால் இலாகா ஊழியன். விரைந்து ஓடிப்போய் அவள் அந்த உறையைப் பெட்டியில் போட்டாள். தபால் ஊழியன் அதையும் சேர்த்துத் தபால் பையில் போடுவதைத் தன் கண்களாலேயே அவள் பார்த்துத் திருப்தியும் கொண்டுவிட்டாள். அப்போது தற்செயலாகத் தனக்குப் பின்னால் யாரோ வந்து நிற்பது போலவும் தன்னையே கவனிப்பது போலவும் தோன்றவே அவள் திரும்பினாள், திகைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/94&oldid=595990" இலிருந்து மீள்விக்கப்பட்டது