பக்கம்:மணி பல்லவம் 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

மணிபல்லவம்


ஏமாற்றத்தால் அன்று யாரிடமோ சாவதற்கிருந்த தன் உயிரைக் காத்த திருவருளை எண்ணி ஆல முற்றத்தை நோக்கிக் கைகூப்பி வணங்கினான் இளங் குமரன். அந்த நேரத்துக்குப் பின்பும் நீலநாக மறவர் சில நாழிகைகள் உறங்கினார். இளங்குமரனுக்கு உறக்கம் வரவில்லை. கண்களை மூடியபடி அன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தித்தவாறே படுத்திருந்தான் அவன். விடிகிற நேரம் நெருங்கியது. -

ஆலமுற்றத்து மரத்தில் காகங்கள் கரைந்தன. எங்கோ கோழி ஒன்று விடிகாலைக் குரல் எழுப்பியது. விடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாழிகைகள் இருக்கும் என்று தோன்றியது. அப்போது நீலநாக மறவர் அவனை எழுப்பி அழைத்துக் கொண்டு ஆலமுற்றத்துக் கடற்கரை ஓரமாக உலாவப் புறப்பட்டுவிட்டார். கரையோரத்து நெய்தற் கழிமுகங்களில் பூத்திருந்த தாழம்பூக்களின் நறுமணம் வெள்ளமாய்ப் பரவிக் கொண்டிருந்தது. “பூக்களுக்கு மணம்தான் பாஷை, மணம்தான் அர்த்தம். மணம்தான் இலக்கணம். மணம்தான் கவி, மணம்தான் அலங்காரம்" என்று பூம்பொழிலில் குருகுல வாசம் செய்த காலத்தில் திருநாங்கூர் அடிகள் அடிக்கடி கூறிய வாக்கியங்களை இன்றும் இளங்குமரன் நினைவு கூர்ந்தான். திருநாங்கூரில் இருந்தபோது அடிகளும் இதேபோல வைகறையில் அவனை அழைத்துக்கொண்டு உலாவப் புறப்பட்டு விடுவார். அப்படிப் பணிபுலராக் காலையில் அடிகளோடு புறப்பட்டுப் போகும்போது இப்படி எத்தனை எத்தனையோ அழகிய சிந்தனைகள் அவரிடமிருந்து பூத்து அவன் செவிகளில் உதிர்ந்திருக்கின்றன.

தாழம் பூக்களின் மணத்தை உணர்ந்தபோது அவனுக்கு ஏதேதோ பழைய நினைவுகள் எல்லாம் உண்டாயின. அந்த நினைவுகளும் புதரில் பூத்த தாழம் பூக்களைப் போலப் பூத்திருக்கும் இடம் தெரியாமல் மணத்தையே பாஷையாகக் கொண்டு. அவனிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/52&oldid=1144388" இலிருந்து மீள்விக்கப்பட்டது