பக்கம்:மதன கல்யாணி-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மதன கல்யாணி

மரங்களிலும், செடிகளிலும், பழுத்துத் தொங்கிய கனிகளின் மீதும் வாவியிலிருந்த தண்ணின் மேற்புறத்திலும் தவழ்ந்து அவற்றின் இயற்கை அழகைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டின. குயிலினங்கள் யாவும் அங்கிருந்த பழங்களைச் சுயேச்சையாகத் தின்று, பளிங்கெனத் தெளிந்த தண்ணிரைப் பருகி, செருக்கடைந்து ஆனந்த பரவசமுற்று மெய்ம்மறந்து தமது தீங்குரலை எடுத்துப் பாடி இனிமையை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தன. கிள்ளை களும், அணில்களும் தத்தம் பெண்டு பிள்ளைகளோடு கொஞ்சிக் குலாவிக்குதுகலமாகத்துள்ளிக் குதித்துப் பண்டிகை கொண்டாடின.

மாளிகைக்குள் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்த விசாலமான ஒரு கூடத்தின் ஒரு புறத்தில் சாய்மான நாற்காலி ஒன்றன் மேல், நாற்பத்தைந்து வயதடைந்த ஒரு ஸ்திரீ சாய்ந்து மூக்குக் கண்ணாடி அணிந்த கண்களினால் ஏதோ ஒரு புஸ்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். இன்னொரு மூலையில் பிரம்புப் பாய் விரிக்கப் பட்ட தரையில் ஒர் அழகிய யெளவன மங்கை உட்கார்ந்து, தனக்கெதிரில் இருந்த வீணையை மீட்டி, ஹம்ஸத்வனி ராகத்தை எடுத்து அற்புதமாக ஆலாபனை செய்து, இந்த இனிய இசை யோடு தனது மாதுரியமான குரலைப் புணர்த்தி அமிர்தத் துளிகளை வாரி ஜிலீர் ஜிலிரென்று வீசிக் கொண்டிருந்தாள். அவளது வயது பதினைந்து அல்லது பதினாருக்கு மேல் இராது. அழகும் இளமையும் உருக்கொண்டு வந்தனவோ என அமைந் திருந்த அவளது அற்புதமேனி எவ்விதமான குற்றம் குறை பாடின்றித் தேஜோமயமாக விளங்கியது. உச்சி முதல் உள்ளங் கால் வரையில் உள்ள ஒவ்வொர் அங்கமும் சம்பூரணமான வளர்ச்சியும் உன்னத வனப்பும் பெற்று, காண்போர் மனதையும் கண்களையும் கவர்ந்து கலக்கின. சுருண்டு சுருண்டு நெளிந்து சென்றிருந்த சிரத்தின் உரோமமும், கயல்மீன் பிறழ்ந்த கண்களும் மாதுளை மலர் போலச் சிவந்து கனிந்து தேன் ததும்பிய அதரங்களும், முல்லை அரும்பின் பத்திகளைப் போலிருந்த மாசற்ற பற்களும், தந்தத்தில் கடைந்தெடுத்த சிமிழ் போலக் கவிழ்ந்திருந்த கன்னங்களும் ஒன்று கூடிய சுந்தரவனத்தில் மந்த ஹாசமும் மகிழ்ச்சியும் இயற்கையிலேயே தவழ்ந்து, அவளது நற்குணத்தையும், கபடமற்ற சுபாவத்தையும் எளிதில் காட்டின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/20&oldid=649643" இலிருந்து மீள்விக்கப்பட்டது