பக்கம்:மதன கல்யாணி-1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 285

கொண்டு விட்டீர்கள் ஆகையால் அதைப் போலவே, நானும் நடந்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று மிகுந்த பணிவோடும் நன்றியறிதலோடும் கூறின்ாள்.

கல்யாணியம்மாளும், சிவஞான முதலியாரும் வெளிப் பார்வைக்குச் சந்தோஷமாக அந்தப் பத்திரத்தில் கையெழுத்துச் செய்து கொடுத்தனர். ஆனாலும், அவர்களது மனம் தாங்கள் செய்த பெருத்த தவறைக் குறித்து அப்போதே பெருத்த விசனமும் கவலையும் கொள்ளத் தொடங்கிவிட்டது. இருந்தாலும், அந்தச் சமயத்தில் தங்களது உண்மையான உணர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டனர். உடனே சிவஞான முதலியார் பாலாம்பாளை நோக்கி, “இப்போது சுமார் பதினொன்றரை மணி ஆகியிருக்கலாம் என்று நினைக்கிறேன். உன்னுடைய பலவீனமான நிலைமையில் உனக்கு இப்போது இன்னமும் அநாவசியமான தொந்தரவு கொடுக்க எங்களுக்கு மனமில்லை; உன்னிடம் இருந்த சொத்துகள் எல்லாம் கொள்ளை போய் விட்டன. ஆதலால், உனக்குப் பண விஷயத்தில் அசெளகரியம் இருக்கலாம். அதுவும் தவிர, நீ இனி உன்னுடைய பழைய நண்பரையும் விலக்க வேண்டியவள் ஆகையால், அவரிடத்தில் இருந்தும், இனி நீ பணத்தை எதிர்பார்ப்பது நியாயமல்ல. ஆகையால், இப்போது உனக்கு ஏதாவது அவசரச் செலவுக்குப் பணம் தேவையானால் வாங்கிக் கொள். கொடுத்து விட்டுப் போகிறோம்; இனி நீ எங்கே இருப்பது என்ற மற்ற விஷயங்களை எல்லாம் நாம் நாளைய தினம் கலந்து பேசிக் கொள்வோம்” என்றார். -

பாலாம்பாள்:- அப்படியே பேசிக் கொள்வோம். எனக்குப் இப்போது பணம் ஒன்றும் தேவையில்லை; எல்லாம் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் இன்னொரு விஷயம்; நேற்று இங்கே கொள்ளை நடந்த பிறகு, இரவில் இங்கே தனியாக இருப்பதற்கு நிரம்பவும் பயமாக இருக்கிறது; இன்றையப் பொழுதை எப்படியாவது இங்கேயே போக்கிவிடுகிறேன். நாளைக்கு நான் பட்டணத்துக்கே வந்துவிட வேண்டும்; தாங்கள் பார்த்து எங்கே வைக்கிறீர்களோ அங்கே இருக்கிறேன்- என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/303&oldid=649842" இலிருந்து மீள்விக்கப்பட்டது