பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10. பிரபுலிங்கலீலை - ஓர் அறிமுகம்


1. அறிமுகம்

1.1. நூல் அறிமுகம்

பிரபுலிங்கலீலை என்பது ஒரு வீர சைவ நூல். இதை ஒரு காப்பியம் எனலாம், காப்பியத் தலைவர் அல்லமப்பிரபு என்பவர். இவர் சிவபெருமானின் தெய்வக் கூறாகக் (தெய்வ அம்சமாகக்) கருதப்படுகிறார்.

இந்த நூல் நயமான கற்பனை வளம் நிரம்பியது. இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி வரையிலுங்கூட இந்நூல் பலராலும் படிக்கப் பெற்றது. திருப்பாதிரிப்புலியூர். ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் தாம் சென்ற இடங்களிலெல்லாம் இந்நூலைப் பலர்க்குக் கற்பித்துள்ளார். அந்தப் பேறுபெற்ற பலருள் அடியேனும் ஒருவன்.

சென்ற ஆண்டு (1991) ஒருநாள், உயர்திரு டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களின் வீட்டிற்கு நான் சென்றிருந்த போது, அவருடைய தந்தையாரும் குங்குலியம் சாமியார் என்று ஒரு சிறப்புப் பெயர் வழங்கப்பெறுபவருமாகிய பெருந்திரு சண்முகம் செட்டியாருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பெரியவர், பிரபுலிங்க லீலைப் பாடல் களைப் பார்க்காமலேயே அவர்பாட்டும் ஒப்பித்தார். நான் வியப்படைந்தேன்; செட்டிநாட்டில் பிரபுலிங்க லீலை பரவியிருந்தமையை உணர்ந்தேன்.