பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

மனத்தின் தோற்றம்



எனவே இக்குறள், பலவகைப்பட்ட வெவ்வேறு சாதியினரின் சாதி ஒழுக்கமுடைமை.இன்மைகளைப் பற்றிப் பொதுவில் கூறவில்லை. வெவ்வேறு சாதியினராயினும், ஒரே சாதியினராயினும், தலைமுறை தலைமுறையாக உறவினராயிருந்தாலும் சரியே! எவர்குடி (குடும்பம்) ஒழுக்கமுடைய குடியோ அவர்குடி உயர்குடியாகும், எவர்குடி ஒழுக்கமற்ற குடியோ அவர்குடி தாழ்குடியாகும் - இது பரம்பரையாகத் தொடர்வதும் உண்டு. இந்த அடிப்படை யிலேயே ஒழுக்கமுடைமை குடிமை - இழுக்கம் இழிந்த பிறப்பு என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், பார்ப்பனர்க்குள்ளும் பறையர்க்குள்ளும் நல்லொழுக்க முடையவரும் உள்ளனர், தீயொழுக்க முடையவரும் உள்ளனர். நல்லொழுக்க முடையோரெல்லாம் நற்குடியினர், தீயொழுக்க முடையோரெல்லாம் இழி குடியினர். இவர்களிடையே குணத்தைக் கொண்டுதான் உயர்குடி, தாழ்குடி பகுக்க வேண்டுமே தவிர, தொழிலுக் கேற்பவுள்ள தூய்வை - சுகாதாரச் சூழ்நிலை என்பவற்றைக் கொண்டு பொதுவில் உயர்குடி, தாழ்குடிகளைப் பிரிக்கக் கூடாது. அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே அரசர்ங்க அலுவல் பார்க்கும் அண்ணனுக்கும், வயல்வெளிச் சேற்றில் வேலை பார்க்கும் தம்பிக்கும் உருவத்தில் - தூய்மையில் - நாகரிகத்தில் வேற்றுமை இருக்கத்தானே செய்யும்? இவ்வேற்றுமையைக் கொண்டு இவர்கட்குள் உயர்வு தாழ்வு கற்பிக்க முடியாதன்றோ? இவருள்ளேயே தம்பி நற்குண நற் செய்கை யுடையவனாயிருப்பின் அவன் உயர்ந்தவன்; அண்ணன் தீக்குண - தீச் செய்கை யுடையவனாயிருப்பின் அவன் தாழ்ந்தவன். இதுபோலவே பார்ப்பனர்க்கும் பறையர்க்கும் இடையேயும் கொள்க. மற்றும், அடுத்த குறளும் ஈண்டு ஒப்பு நோக்கி ஆராயத்தக்கது.