உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

23



முதலியார் என்னும் ஒரு சாதியை எடுத்துக் கொள்வோம். அம்முதலியாருள்ளும் பல முதலியார் பிரிவுகள் இருக்கலாம். அவற்றுள் ஏதேனும் ஒரு பிரிவு முதலியார் சாதியினரை ஈண்டு எடுத்துக் கொள்வோம். அவர்களே தம் பிரிவுச் சாதிக்குள் - தம் உறவினருக்குள் உயர் சாதி - தாழ் சாதி கூறுவதை நாம் கண்கூடாகக் காணலாம். எங்கேயும் அப்பால் செல்ல வேண்டியதில்லை; ஒரு சாதிக் கணவன் - மனைவியையே எடுத்துக்கொள்வோம். கணவன் குடும்பத்தாரும், மனைவியின் தாய்வீட்டுக் குடும்பத்தாரும் ஐந்தாறு தலைமுறைகளாகப் பெண் கொடுக்கல் - வாங்கல் (சம்பந்தம்) செய்துவந்திருப்பார்கள். இங்ஙனம் வழிவழி உறவின் மேல் மணந்து கொண்ட இக்கணவன் மனைவியருக் குள் குடும்பத்தில் ஒரு சமயம் சிறு சச்சரவு ஏற்படுவதுண்டு. அப்போது கணவன், தன் மனைவி தவறு செய்ததாக எண்ணியபோது அத் தவறைச் சுட்டிக்காட்டி, ‘நீ என்னடி செய்வாய்? உன்னைக் குறை சொல்லிப் பயன் இல்லையடி, இது உன் சாதிப் புத்தியடி’ என்று வைகிறான். அதுபோலவே, மனைவியும் தன் கணவனை நேரில் சொல்வதுண்டு. சில பெண்கள் தம் பிள்ளையை நோக்கி, இது உங்கள் குலாசாரம் - சாதி வழக்கம் என்று கூறித் தம் கணவர் குலத்தைச் சுட்டிப் பேசுவதுண்டு. இவற்றையெல்லாம் நாம் நேரில் கண்டிருக்கின்றோ மல்லவா?

அப்பப்பா! ஒரு சாதி ஆணும் - ஒரு சாதிப் பெண்ணும் மணந்து வாழ்கின்ற ஒரு குடும்பத்திலேயே கணவன் உயர்ந்த சாதி - மனைவி தாழ்ந்த சாதி, அல்லது கணவன் தாழ்ந்த சாதி - மனைவி உயர்ந்த சாதி, இன்னும், தாய் ஒரு சாதி - சேய் (பிள்ளை) ஒரு சாதி யென்றால், பார்ப்பான் - பறையன் முதலிய சாதிகட்குள் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது?