பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

முத்தமிழ் மதுரை



ஈவாரும் ஏற்பாரும்

“மதுரையிலே வாழும் மக்கள் செல்வச் செழுமையினாலே திளைத்தவர்கள். தமக்கு உரிமையுடைய செல்வத்தைப் பிறர்க்கும் மனமுவந்து கொடுத்து மகிழுகின்ற ஈகைக்குணமும் அவர்களிடம் உண்டு.

"செவ்வேளான முருகன், கோயில் கொண்டிருக்கின்ற சிறப்பினை உடையது திருப்பரங்குன்றம். அங்கே, மக்கள் திரள்திரளாகச் சென்று பரங்குன்றப் பெருமானைப் போற்றிவழிபடுவார்கள். தமக்குப் பேரின்பநலத்தினைத் தந்தருளுமாறு அவனை இரந்து வேண்டியும் நிற்பார்கள்.

"வானத்துத் தொலைதூரத்திற்கும் உயர்ந்திருக்கும் மாடங்களை உடையது ‘கூடல்' என்னும் மதுரைப் பேரூர். அதனிடத்தே விளங்கும் கொடையாளரைத் தாமும் மனத்துட்கொண்டு, மக்கள் எல்லாருமே அவரைப்போலக் கொடுக்கும் இயல்பினராக வாழ்ந்து வருதல் வேண்டும்.

“பரங்குன்றப் பெருமானின் திருவடிகளைப் பணிந்து வேண்டி நிற்கும் அடியார்களை நினைந்து, அவர்களைப் போலவே இறைவனை இரந்துநின்று பேரின்பத்தை வேண்டுவதற்கும் அனைவரும் விரும்புதல் வேண்டும்.

“இவ்வாறு வாழ்கின்றவர் எவரோ, அவரே வாழ்வாங்கு வாழுகின்ற மக்கள் என்னும் சிறப்பிற்கு உரியவர்கள். இவர்கள், தவறாமல் புத்தேளுலகத்தை அடைந்து, அங்கே நிலைத்த இன்பத்திலே திகழ்வார்கள். இத்தகையவர்கள் அல்லாமல் புத்தேளுலகத்திற்குப் போகும் தகுதியுடையவர் தாம் பேறு யாவரோ?”

மதுரையின் பெருமையை இப்படிப் போற்றுகிறது மற்றொரு பரிபாடற் செய்யுள். ‘தமிழர்கள் அனைவரும் தம் வாழ்க்கையின் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டிய சிறப்பினர் மதுரைவாழ் மக்கள்’ என்கிறது அது.

ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும்
சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்
போவாரார் புத்தேள் உலகு.

இந்த மூன்று செய்யுட்களும் மதுரை நகரின் நிலைபெற்ற புகழைமட்டும் சொல்வதுடன் நின்றுவிடவில்லை; மக்கள் வாழ்விற் கொள்ளவேண்டிய சில உண்மைகளையும் வலியுறுத்துகின்றன.