பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மொஹெஞ்சொ - தரோ


கழுத்தில் பட்டைகள் கட்டப்பெற்று இருந்தன. “இறுதியிற் கூறப்பட்ட நாய்கள், இந்திய ஓநாய் இனத்திலிருந்து தோன்றியவை; சாதாரண நாய்கள் இந்திய நரி இனத்திலிருந்து தோன்றியவை’, என்று அறிஞர் பய்னி பிரசாத் அறைகின்றனர். இத்தகைய நாய்களின எலும்புகள் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளன. இந்திய நாய்கள் மரக்கலங்கள் மூலம் பாபிலோனியாவுக்கு அனுப்பப்பட்டன என்பதிலிருந்து, நாய்களை வளர்க்கும் வழக்கம், பண்டைக்கால முதலே இந்தியாவில் இருந்ததென்பது தெளிவாம்.

பூனைகள்

சிந்துப் பிரதேசத்தில் நாய்களைப் போலப் பூனைகள் இருந்தன என்பது கூறக்கூடவில்லை. என்னை? சில எலும்புகளே பூனைகளைக் குறிப்பனவாகக் கிடைத்திருத்தலால் என்க. மேலும், பூனைகள் அபிசீனியாவிற்றாம் தோற்றம் எடுத்தவை. ஆதலின், அப்பண்டைக் காலத்தில் இந்தியாவில் மிகச் சிலவே கொண்டுவரப்பட்டிருத்தல் வேண்டும். பின்னர் நாளடைவில் பூனைகள் இந்தியாவிற் பெருகிவிட்டன.[1]

பன்றிகள்

பன்றிகளின் எலும்புகள் மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளன. இவை அக்காலத்தில் மிக்கிருந்தன. ஆதலின், அம்மக்கள் இவற்றின் இறைச்சியை உண்டு வந்தனர். இவை அன்றிக் காட்டுப் பன்றிகளும் உணவுக்குப் பயன்பட்டன.

ஆடுகள்

மலையாடுகள், வெள்ளாடுகள் என்பவற்றைக் குறிக்கும் பதுமைகள் பலவாகும். வெள்ளாடுகள் சிந்துப் பிரதேசத்தில் மிக்கிருந்தன. காஷ்மீரப் பகுதிகளில் இன்றும் மலையாடுகள் உள்ளன.


  1. Pre-historic Civilization of the Indus Valley, p.41.