பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. சமயநிலை

சான்றுகள்

மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் களிமண்ணாற் செய்து சுடப்பெற்ற சிறிய வடிவங்களும் முத்திரைகளும் உலோகத் தகடுகளும் தாயித்துகளும் நிரம்பக் கிடைத்தன. அவற்றின் மூலம் அக்காலத்தவர் தம் இறைவணக்கத்திறகுரிய பொருள்கள் இன்னின்னவை என்பதை ஒருவாறு அறிதல் கூடும்.பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் கடவுள் உருவம் வைக்கப் பெற்று வழிபடப் பெற்றது என்று அறிஞர் கருதுகின்றனர். கடவுள் உருவம் வீட்டுச் சுவரில் இருந்த மாடங்களிலேனும் சுவரில் மரப்பலகை அடித்து அதன் மீதேனும் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்று டாக்டர் மக்கே கருதுகிறார்.

தரைப் பெண் வணக்கம்

சிந்து வெளியிற் பெண் வடிவங்கள் மிகப் பலவாகக் கிடைத்துள்ளன. இவை போன்றவை பலுசிஸ்தானம் முதல் கிரீஸ் வரையில் உள்ள எல்லா இடங்களிலும் கிடைத்துள்ளன. எனவே, பண்டை மக்கள், தமக்கு வேண்டிய எல்லா உணவுப் பொருள்களையும் உதவி வந்த தரையைப் பெண் தெய்வமாக வழிபட்டு வந்தனர் என்பது வெளியாகிறது.[1] இத்தரைப் பெண் தெய்வம் பிற நாடுகளில் பிற கடவுளருடன் சேர்த்தே வணங்கப்பட்டது. அத்தெய்வத்திற்குக் கணவன், மகன் இரண்டு தெய்வங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன. ஆனால், சிந்து வெளியில் தரைப் பெண் தேவதை தனியாகவே வணங்கப்பட்டது என்னலாம். அத் தெய்வம், அமைதியான முகத் தோற்றங் கொண்டதாகவும், அச்சமூட்டும் தோற்றமுடையதாகவும், குழந்தையை வைத்திருப்பது


  1. De Margon’s ‘Pre-historic Man’, p.250.