பக்கம்:ரமண மகரிஷி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

1. திருவண்ணாமலை!

ளிங்கு நதி போல மனம் தூய்மையாக இருப்பதற்குத் தெய் நிலை என்று பெயர். அந்த இறையுணர்வை உலகுக்கு உணர்த்தவே கயிலாய மலையில் சிவபெருமான் கைலாச நாதர் என்ற திருக்கோலத்தோடு காட்சி தருகிறார். அந்த மலையில் உள்ள பளிங்கு ஏரிக்கும் மானச சரோவர் என்றே பெயரிடப்பட்டுள்ளது.

சிவபெருமானை வழிபடும் சிவநேசச் செல்வர்கள், ஒரு காலத்தில் கண்ணாடி போன்ற மிகத் தூய்மையான மனத்துடன் அல்லும் பகலுமாக வழிபட்டு வாழ்ந்து வந்ததால், கடவுள் அவர்கள் நெஞ்சில் கோயிலாகி அருள் பாலித்தார் என்று அறுபத்துமூன்று நாயன்மார்களது இறைவழிபாட்டு வாழ்வைச் சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் மாக்கதை என்ற பெயரில் பெரிய புராணத்தில் எழுதியுள்ளார். அதைப் படிப்பவர்களுக்கு ஊன் உருகும்; உள்ளம் உருகும்.

எனவே, அத்தகைய அருளாளர்கள் மனத்துள், இறைவன் இருந்தமையால், அவர்கள் ஊர்தோறும் நடமாடும் கோயிலாக நகர்ந்து இறையருளை மக்களுக்குப் போதித்தார்கள். அத்தகைய சிவனடியார்கள் வாழ்ந்த பூமியாக, சித்தத்தை அடக்கிய சித்தர்கள் முக்திபெற்ற மண்ணாக, ஞானியர் நடமாடிய தலமாக, யோகியர் சமாதியான இடமாகத் திருவண்ணாமலை இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/7&oldid=1279911" இலிருந்து மீள்விக்கப்பட்டது