பக்கம்:ரமண மகரிஷி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ரமண மகரிஷி




திருவண்ணாமலை என்ற புண்ணிய பூமியில் அருணாச்சலேஸ்வரர் பெருமான் திருக்கோவிலுள்ளது.

இந்தப் புனிதத் தலம் தமிழ் நாட்டின் முக்தி தரும் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவதற்குக் காரணம் இந்த அண்ணாமலை தவமலை என்றும், யோக மலை என்றும், சிவமலை என்றும், அக்னிமலை என்றும், ஜோதிமலை என்றும் பண்டையக் காலம் முதல் இன்று வரை ஆன்மீக ஞானிகளால் அழைக்கப்பட்டு வருவதால்தான்.

இந்த நகர், முன்னர் வடார்க்காடு மாவட்டத்தின் ஒரு சிறப்புமிக்க நகரமாக, முதல் விடுதலைப் போர் துவங்கப்பட்ட வேலூர் பெருநகரம் உள்ள மாவட்டத்திலே, ஒரு புராணப் பெருமை பெற்ற நகரமாக இருந்தது. தற்போது ஆன்மீகப் புகழ் பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் என்ற பெயரில் ஒரு தனி மாவட்டமாகவே உருவாகியுள்ளது.

சைவ ஞானியர்கள், சிவமே மலையாக உருவெடுத்தும், மலையே சிவமாக உருப்பெற்றும் உள்ள நகரம் திருவண்ணாமலை என்பர். இந்த புனித நகரமான திருவண்ணாமலை நகருக்கு மேலும் பெருமை சேர்த்தவர்களுள் ஒருவர்தான். திருப்புகழ் விருப்போடு படிப்பவர் சிந்தை வலுவாலே, ஒருத்தரை மதிப்பதில்லை முருகா நான் உந்தன் அருளாலே என்று திருப்புகழ் பாடி முருகனடியாராக டெருமையுடன் வாழ்ந்து முக்தி பெற்ற அருணகிரிநாதர் ஆவார்.

திருவண்ணாமலையை தவமலை என்று பெருமையோடு மக்களுக்கு நிரூபித்தவர்களுள் மகான் சேஷாத்திரி மௌன குரு யோகி ராம் சுரத்குமார் போன்றவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக நின்று, யோக மலையின் புகழை இந்தியா முழுவதுக்கும் மட்டுமன்று, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற உலக நாடுகளுக்கெல்லாம் தனது தவ பலத்தால் நிலை நாட்டிய மகான் ரமணரிஷி ஆவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/8&oldid=1279910" இலிருந்து மீள்விக்கப்பட்டது