பக்கம்:ரமண மகரிஷி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என். வி. கலைமணி

77


லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட சமாதிக்கு ‘மாத்ரு பூதேசுவரர்’ என்று அவர் பெயர் குட்டினார்.

மகரிஷியின் பெருமை தமிழ்நாட்டிலே மட்டுமன்று. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகத்திலும் பரவியது. அதனால், பக்தர்கள் கூட்டம் தினந்தோறும் பெருகி வந்து அவரிடம் அருளாசி பெற்றது. நாள் போகப் போக அவரது பெருமை இந்தியா முழுவதும் பரவியது. அவரைத் தரிசிக்க அயல் நாடுகளிலே இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்தபடியே இருந்தார்கள்.

ரமண மகரிஷி அருணாசல மலையிலே இருந்து அடிவாரத்திற்கு வந்துவிட்டால், பக்த கோடிகள் அவரைத் தரிசிக்க வசதியாக இருக்கும் என்று பக்தர்கள் ரமண ரிஷியாரிடமே கேட்டுக் கொண்டார்கள். மகரிஷியும் கீழே வந்தார். பாலி தீர்த்தம் அருகே தங்கி, மக்களுக்கு அருளாசி அளித்தார். அங்கேதான் ரிஷி தங்கவேண்டும் என்று பக்தர்கள் விரும்பினார்கள். அவர்களது ஆசையை ரமணரிஷி ஏற்றார். அதற்கேற்ப அங்கே ரமணாசிரமத்தை மக்கள் நிறுவினார்கள்.

இரமண மகரிஷியாரின் தாயார் அழகம்மையின் சமாதிக்கு அருகில் ஒரு சிறு குடிசை கட்டினார்கள் மக்கள். மகரிஷி அங்கே தங்கினார்! ரமணரின் சீடர்களின் ஆசையாலும், ஆன்மிக அன்பர்களது அக்கறையாலும், பக்தர்களது ஆர்வ மேலீட்டினாலும் அங்கே ஓர் ஆலயம், விருந்தினர் தங்கும் விடுதி, வருபவர்கள் வசதிக்கான உணவு விடுதி ஆகியவை தோன்றின.

இரமணாசிரமம் பேரின்பத்தை அடைய தியானமோ, தவமோ செய்பவர்களுக்கு வழிகாட்டிடும் ஞானாலயமாக மாறியது. அவ்வாறான மாற்றங்களுக்குப் பிறகு, கட்டங்கள் தோன்றின; மக்கள் குடியேற்றங்கள் பெருகின; வாழ்க்கையில் மன அமைதி காணும் மலர்த் தோட்டமாக ரமணாசிரமம் காட்சி தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரமண_மகரிஷி.pdf/79&oldid=1281238" இலிருந்து மீள்விக்கப்பட்டது