பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 15 டின் சர்வாதிகாரியாக வளர்ந்திருந்த பெனிட்டோ முசோலினி தனது இளம் பிராயத்தில், சொந்த ஊரிலிருந்து ரோமாபுரிக்கு நடந்தே போனான்; அப் போது அவன் சட்டைப் பையில் ஒரு சில சில்லறைக் காசுகளே இருந்தன... ரஷ்ய எழுத்தாளன் மாக்சிம் கார்க்கி சின்ன வயசில் அகண்ட ரஷ்யா பூராவும் நடந்தே சஞ்சாரம் செய்திருக்கிறான்... நான் ஏன் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நடந்து போகக் கூடாது? நடக்க முடியாதா என்ன? தாராளமாக நடக்கலாம். 400 மைல்கள் தானே! தினம் 30 மைல் கள் நடந்தால் பதினாலாவது நாளில் சென்னையில் இருக்கலாமே! இவ்விதம் என் மனம் கணக்கிட்டு முடிவு செய் திருந்தது. சாப்பாடு இல்லாமல், தூங்கவும் ஒய்வு எடுக்கவும் வசதி இன்றி, தினசரி முப்பது மைல்கள் நடப்பது சாத்தியம் தானா என்று அந்தக் காலத்தில் நான் எண்ணவில்லை. ஒரு பையில் இரண்டு வேட்டி சட்டைகள் துண்டு களோடு, சிறிது அவலும் எடுத்துக் கொண்டு மிடுக் காகக் கிளம்பிவிட்டேன். ஒரு நீண்ட கடிதம் எழுதி, புத்தகப் பெட்டிக்குள் மேலாக வைத்துவிட்டுத்தான். அந்தக் கடிதத்தை என் தம்பியோ அண்ணாவோ, உடனடியாகவோ ஒரு சில மணி நேரங்களிலோ பார்க்கவில்லை. பார்த்திருந்தால் சைக்கிளில் வந்து எளிதில் என்னை பிடித்திருக்கக் கூடும்! காலம் எனக்குத் துணை புரிந்தது. அன்று சாயங்காலம்தான் கடிதம் அவர்கள் பார்வையில் பட்டது.