பக்கம்:வல்லிக்கண்ணன் கட்டுரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 வல்லிக்கண்ணன்

மற்ற எழுத்தாளர்கள் மர்ம மற்றும் துப்பறியும் நாவல்களில் இப்படிப்பட்ட வேலைகளைச் செய்துவருகிறார்கள். தொடர் கதைகள் எழுதுகிற புகழ் எழுத்தாளர்களிடையே போட்டி அதிகரிக்கவும் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்காகவும் அவர்கள் புதுமை பண்ணவேண்டியது அவசியமாகிறது. இவர்களுடைய புதுமை, இனிமை, தீவிர முற்போக்கு எல்லாம் பெண் அங்கங்களை விவரிப்பதிலும், ஆண்பெண் செக்ஸ் ஈடுபாடுகளைச் சித்திரிப்ப திலும், காம வக்கிர விவகாரங்களை எடுத்துச் சொல்வதிலும் தான் மிஞ்சிக் காணப்படுகிறது.

தொடர்கதைகள் நல்ல நவீனங்களையும் அறிமுகப்படுத்தக் கூடும். ஆனந்தவிகடன் முன்னொரு காலத்தில் பிரேம்சந்த், தாகூர், நாவல்களை, தொடராகத் தரத்தான் செய்தது. கலைமகள் பிரேம்சந்த் மற்றும் தாராசங்கர்பானர்ஜி நாவல்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. பத்திரிகை என்பதும் முதல் போட்டு லாபம் சம்பாதிக்கக்கூடிய ஒரு தொழில்தான் என்ற நிலை ஏற்பட்டதும், பத்திரிகை நடத்துகிறவர்களின் நோக்கும் போக்கும் முற்றிலும் மாறிப்போயின.

ஒருகாலத்தில் தொடர்கதைகளைப் பெண்களே விரும்பிப் படிப்பதாகச் சொல்லப்பட்டது. அப்படி இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறு ருசி உடையவர்களும், பல்வேறு தரத்தினரும், வாழ்க்கையின் பலவித நிலைகளில் (அலுவல்களில்) உள்ளவர்களும் தொடர்கதைகளைப் படிக்கத்தான் செய்கிறார்கள்.

தொடர்கதைகளும் தமிழ் சினிமா மாதிரியேதான் என்று சொன்னேன். இரண்டும் வாழ்க்கையின் எதார்த்தங்களைச் சித்தரிப்பதில்லை. கிளுகிளுப்பூட்டும் கற்பனைகளில் அதிகம் ஈடுபடுகின்றன. வாழ்க்கையின் வறட்சியை மறக்க விரும்புகிற மனிதர்களுக்கு, பசுமைக்கனவுகளைக் காட்டும் போதைச் சரக்கு களாக விளங்குகின்றன. நுகர்வோரின் பொழுதுபோக்கையே கருத்தில்கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

தமிழ்ச் சினிமாப்படங்களைப் பார்த்து ரசிப்பதற்குப் பொறுமையும் போதிய மனப்பக்குவமும் தேவை. பத்திரிகைத் தொடர்கதைகளைப் படித்து ரசித்து மகிழ்வதற்கும் தனியான மனப்பக்குவமும் பொறுமையும் கட்டாயம் வேண்டும்.