பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108 வல்லிக்கண்ணன் கதைகள்

பேபி பார்த்தாள். அவ்வளவுதான். கயிற்றுச் சுழற்சியின் லயம் கெட்டு விட்டது. கயிறு கால்களில் சிக்கியது. அவள் முகம் செக்கச் சிவந்தது.

'மன்னிக்கணும்' என்று வார்த்தையை மென்றான் கைலாசம். 'ஸார்வாளைப் பார்த்து இந்தப் புத்தகத்தைக் கொடுக்கலாம் என்று வந்தேன்...'

தலையை நிமிர்த்தாமல், கண்ணின் கருமணிகளை விழிக்கடையில் நிறுத்தி, அப்பா இல்லை. எங்கோ வெளியே போயிருக்கிறாங்க. வர நேரமாகும்' என்று அறிவிப்புச் செய்தாள் குமரி.

'அப்படியானால் ஸார் வந்ததும் இதைக் கொடுத்து விடுங்கள்' என்று கையிலிருந்த புத்தகத்தை அங்கிருந்த மேசை மீது வைத்துவிட்டு அவன் வேகமாக வெளியேறினான். தெருக் கதவை இழுத்துச் சாத்திவிட்டு நடந்தான்.

சில அடி தூரம் சென்றதும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று ஏனோ அவனுக்குத் தோன்றியது. அந்தத் தூண்டுதலுக்கு இணங்கியதால் நஷ்டம் ஏற்பட்வில்லைதான்! அவன் திரும்பி நோக்கிய போது, வாசல்படியில் நின்று முன்னால் வளைந்து எட்டிப் பார்த்த பேபியின் தரிசனம் அவனுக்குக் கிட்டியது.

'மனித மனசுக்கும் எலெக்ட்ரிக் தனம் உண்டு. ஒரு மனம் தீவிரமாக எண்ணுகிறபோது, அந்த எண்ணம் சம்பந்தப்பட்டவரை பாதிக்கிறது. அவர் திரும்பிப் பார்க்கமாட்டாரா என்று பேபி தீவிரமாக எண்ணியிருப்பாள். அது என்னைத் தொட்டு 'ஷாக்' எழுப்பியிருக்கும். அதன் விளைவுதான் நான் திரும்பி நோக்கியது' என்று அவன் மனம் 'விஞ்ஞான ரீதியான விளக்கம்’ வரைந்து மகிழ்வுற்றது.

அவன் திரும்பிப் பார்த்ததில் ஆனந்தம் அடைந்த பேபி முகத்தைச் சிரிப்பால் ஒளிப்படுத்திக் காட்டிவிட்டு உள்ளே இழுத்துக்கொண்டாள்.

'இளமையும் இனிமையும் கலந்த உருவம் கண்ணுக்குக் குளுமை. எழில் பெற்ற இளமை சும்மா நின்றாலே இனிய காட்சிதான். அது வளைந்தும் அசைந்தும் துள்ளியும் குதித்தும் ஆடுகிறபோது கண்கள் கவிதை - கலை - ஒவியம் எல்லாவற்றையும் பருகிக் களிக்க முடிகிறது. இதற்கு பேபி நல்ல சாட்சி' என்று கைலாச மனக்குறளி பேசியது. அதன் மண்டையில் தட்டி அதை அடக்க வேண்டும் எனும் எண்ணம் அவனுக்கு எழவே இல்லை.