பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

வல்லிக்கண்ணன் கதைகள்


அதன் பிறகு நமசிவாயம் கல்யாணத்தை நாடவில்லை; குடும்ப வாழ்வுக்கு ஆசைப்படவுமில்லை. சமூக சேவை, பொது நலப் பணி, கடுமையான உழைப்பு என்று பல வழிகளிலும் தன் கவனத்தையும் காலத்தையும் செலவிடலானார். அதில் அவருக்குப் பணம் கிடைக்கவில்லை. ஒரளவு பெயர் கிடைத்தது. அவருக்கு அன்பர்களும் வியப்பர்களும் வந்து சேர்ந்தார்கள். ‘நமசிவாயம் அவர்களின் அன்பு உள்ளத்தை, ஆற்றலை, உழைப்பை, தன்னலமற்ற சேவையை - பொதுவாக, அவரது பெருமையை, மதிப்பை - நம்மவர்கள் நன்றாக உணரவில்லை. ஊம். அவருக்குக் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்! அவர் மட்டும் அமெரிக்காவில், அல்லது ஐரோப்பிய நாடு எதிலாவது பிறந்திருந்தால், மிகவும் ஏற்றிப் போற்றப்பட்டு மிகுந்த கெளரவ நிலைக்கு உயர்த்தப் பட்டிருப்பார் என்று அவர்கள் சொல்வது வழக்கம்.

பிறப்பு, வாழ்வு இவைகளிலே அவருக்குச் சீரும் சிறப்பும் கொடுக்காத காலம் மரணத்திலாவது பரிகாரம் செய்ததா? அதுவும் இல்லை.

முக்கியமான சமூகத் திருப்பணி ஒன்றின் காரணமாக திருவாளர் நமசிவாயம் தமது மாவட்டத்தை விடுத்து பட்டணம் போகத் திட்டமிட்டார். இன்று போகலாம், நாளைப் போகலாம் என்று காலத்தை ஏலத்தில் விட்டு நாள் கழித்தார். பிறகு ஒரு நாள் துணிந்து ரயிலேறிவிட்டார்.

அங்கும் காலம் சதி செய்துவிட்டது. 'நேற்றே கிளம்பியிருக்கணும். போக முடியலே. நாளைக்கு என்று இன்னும் ஒத்திப் போடுவது சரியல்ல. இன்றே போய்விட வேண்டியது தான்’ என்று சொல்லி யாத்திரை கிளம்பினாரே நமசிவாயம், அவர் தமாஷ் பண்ணி மகிழ்ந்த ஜாதக விசேஷம் இப்பொழுது விஷமத்தனமாக விளையாடியது! ஒரு நாள் முந்தியோ, ஒரு நாள் தாமதித்தோ நேராத, கோர விபத்து அன்றுப் பார்த்து ரயில் பாலத்தில் விளையாடி, வண்டிகளைக் கவிழ்த்து, பலரைச் சாகடித்தது. செத்தவர்களில் நமசிவாயமும் ஒருவர்.

அவர் உடல் நசுங்கிச் சிதைந்து, ஆளே அடையாளம் தெரியாதபடி மாறிப் போயிருந்தது.

'பாவம், நல்ல மனிதருக்கு நல்ல சாவு கொடுத்து வைக்கலியே! என்று அவரை அறிந்திருந்த அனைவரும் அனுதாபப்பட்டார்கள்.

திருவாளர் நமசிவாயம் வளர்ந்து, வாழ்ந்து, பணி பல புரிந்து வந்த நகரத்தில் அவருக்காக - அவர் நினைவை