பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெயிலும் மழையும் 129

நிற்கும் மொக்கு அதிகாலையில் வசீகர வனப்பும் இனிய மணமும் பெற்றுத் திகழ்கிறதே, அதுமாதிரி.

சொக்கம்மாளுக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால், அந்த மாறுதல் அவளுக்கு மிகுதியும் பிடித்திருந்தது. மற்றவர்கள் அவளைச் 'சிறு பிள்ளை' என்று கருதுவதில்லை. இப்போதெல்லாம் அலட்சியமாக மதிக்கவில்லை. 'ஏட்டி - வாட்டி’ என்ற தன்மையில் ஏவுவதையும் விட்டு விட்டார்கள். அவள் பெரியவளாக வளர்ந்து விட்டாள். அவளது தந்தை கூட 'வாம்மா, என்னம்மா’ என்ற முறையில் தான் பேசினார். முன்பெல்லாம் அப்படியா?' ஏ முண்டம். ஏட்டி சின்னமூதி, பரட்டைக் கழுதை' என்றெல்லாம் ஏசிக் கொண்டிருப்பார்.

இப்போ, எல்லோரும் 'சொக்கம்மா வளர்ந்து விட்டாள். நாளைக்கே இன்னொரு வீட்டில் போய்க் குடியும் குடித்தனமுமாக இருந்து நல்ல பேரு வாங்குவாள்' எனும் ரீதியில் பேச்சுக்குப் பேச்சு சொல் உதிர்த்தார்கள்.

சீதை அம்மாள் அவளைச் 'சின்னப் பொண்ணு' என்று கருதுவதை விட்டு விட்டாள். தனக்குச் சமமானவள், தனக்குத் துணை என மதித்தாள். எல்லா விஷயங்களையும் மகளிடம் சொல்லுவாள். சில விஷயங்களில் மகள் தனக்கு வழி காட்ட முடியும் என்று கூட அவள் எண்ணினாள். மகளின் ஆலோச னையை அடிக்கடி நாடுவாள்.

சொக்கம்மாளுக்கு இதெல்லாம் மிகவும் பிடித்திருந்தது. இந்த வாழ்க்கையில் விளையாட்டுப் பிள்ளை அல்ல அவள்; அவளும் முக்கியமானவள் தான் என்ற கர்வம் கூட அவளுக்கு ஏற்பட்டது.

சொக்கம்மாளுக்கு வயசு பதினாறு. 'நீ இன்னும் சின்னப்பிள்ளை இல்லை, பாவாடை தாவணி கட்டிக்கிட்டு அலையிறதுக்கு. இனிமேல் சேலைதான் கட்டணும்' என்று அம்மா உத்திரவு போட்டு விட்டாள். அம்மா விசேஷம், விழா நாட்களில் அணிவதற்காக வைத்திருந்த நல்ல சீலையையும் ஜாக்கெட்டையும் உடுத்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்ப்பதில் அவள் அடைந்த மகிழ்ச்சி இவ்வளவா, அவ்வளவா? கப்பல் காணாது அதை அடக்கிக் கொள்ள!'

தினுசு தினுசான புடவைகளைக் கட்டிக் கொள்வதற்கு சொக்கம்மாளுக்குப் பிடிக்கும். எந்தப் பெண்ணுக்குத் தான் பிடிக்காது? ஆனால் வாங்குவதற்கு வசதி இல்லை. நாகரிக ஜவுளிக்கடைகளின் முன்னால், கண்ணாடிப் பெட்டிகளுக்குள், நிற்கிற ஆள் உயரப் பொம்மைகள் தன்னைவிட அதிர்ஷ்டம்