பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 வல்லிக்கண்ணன் கதைகள்

'ஜம்னு இருக்குது. அதுவும் நல்லாயிருக்குது. நீயும் நல்லாயிருக்கிறே!’ என்று அவர் சொன்னார்.

அவள் அவர் பக்கம் வீசிய பார்வையில் ஆனந்தம் இருந்தது. பெருமை இருந்தது. ஆசையும் கலந்திருந்தது. யுவதியின் கண்களுக்கே இயல்பான கூரிய காந்த ஒளியும் இருந்தது.

அவற்றால் வசீகரிக்கப்பட்ட சுந்தர மூர்த்தி அவளருகே சென்று அவளை இழுத்துத் தழுவிக் கொண்டார். அவள் கண்களுள் மறைந்து கிடந்த அற்புதத்தை ஆராய விரும்புவார் போல் உற்று நோக்கினார்.

அவள் திடுக்கிட்டுத் திகைத்த போதிலும் செயல் திறம் இழந்து விட்டாள். உணர்வுகள் அவளை ஆட்டுவித்தன. இந்தப் புது அனுபவம் சுகமாகவும் மனோரம்மியமாகவும் இருந்தது. அவளும் அவரோடு இணைந்து, தலையை அவர் மார்பில் சாய்த்துக் கொண்டாள். என்ன பரமானந்த நிலை! இருவருமே இன்பச் சிறகு பரப்பி, பொன்மயமான அற்புத வெளியிலே மிதப்பதுபோல் பரவசமுற்று நின்றனர்.

அவ்வேளையில்தானா சீதையம்மாள் அந்தப் பக்கம் வரவேண்டும்? தற்செயலாக அவள் கண்ணில்பட்ட தோற்றம் பகீரென அவள் உள்ளத்திலும் வயிற்றிலும் தீ இட்டது. 'நல்லாத்தானிருக்கு இந்த நாடகம்!' என்று சுடு சொல் உதிர்த்தாள் அந்தத் தாய். "சீ, வெட்கமில்லை?' என்று காறி உமிழ்ந்தாள். இருவருக்கும் பொதுவான அந்தப் பேச்சு இருவரையும் சுட்டது.

சொக்கம்மா வேகமாக விலகி, தன் வீட்டுக்கு ஓடி விட்டாள். 'அறியாப் பெண்ணை ஏமாற்றி, தன் வலையில் விழ வைத்த அயோக்கியனை' - சுந்தரமூர்த்தியை அவள் இவ்விதம் தான் எடை போட்டாள் - கண்ணெடுத்துப் பார்க்கவும் விரும்ப வில்லை சீதை.

மகளின் சமாதானங்களும் உறுதிமொழிகளும், நெஞ்சில் அடிபட்ட - நம்பிக்கைச் சிதைவு பெற்றுவிட்ட - தாய்க்கு மன ஆறுதல் அளிக்கவில்லை. அவளும் அவள் கணவனும் தீவிரமாக முயற்சி செய்து, அவசரம் அவசரமாக ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து முடித்தார்கள்.

சொக்கம்மா அழுதாள். அரற்றினாள். பட்டினி கிடந்தாள். சுந்தரத்துக்குத் தன் மீது ஆசை என்றும், தனக்கும் அவர் மீது ஆசை என்றும், அவர் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வார் என்றும் சொன்னாள். அவள் பேச்சு எடுபட வில்லை. சினிமாவிலே, நாடகத்திலே பார்க்கிறபடி எல்லாம் வாழ்க்கையில் நடக்கணும் - நடந்துவிடும் - என்று அவள் எதிர்பார்ப்பது பிசகு