பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாரைக் காதலித்தான்? 137

உருண்டை முகமும், மல்கோவாக் கன்னங்களும் இப்போது ரத்தமேறிச் சிவந்திருந்தன. அவன் கண்களைத் தொட்ட அவளது மையுண்ட விழிகள் சுடரிட்டு மின்னிப் பின் தாழ்ந்தன. பெரிய முட்டைகோஸ் போன்ற அவள் முகம் சற்றே தணிந்தது.

வாசலின் பக்கமாக எட்டிப் பார்த்த சின்ன அக்கா, அவனைக் கண்டதும், இருட்டில் திரிகின்ற சிறு பூச்சி பிரகாசமான வெளிச்சத்தால் தாக்குண்டதும் திணறித் திண்டாடுவது போல் திகைத்தாள். தங்க விளிம்புக் கண்ணாடிகளுக்குள் கயலெனப் புரண்ட கண்கள், அவனைக் கூர்ந்து நோக்கின. அவளது வெள்ளை முகத்தின் ஒட்டிய கன்னங்கள் மேலும் வெளிறுவது போல் தோன்றின. சட்டெனப் பின் வாங்கி அவள் உள் வாசலின் நடைப்படி மீது அமர்ந்தாள்.

இவ்வளவையும் சந்திரன் கண்கள் விசாலப் பார்வையால், ஒரே கணத்தில் - அவை நிகழும் நேரத்திலேயே - கிரகித்துக் கொண்டன.

இப்போதும் அவன் சிரித்த முகத்தோடு அம்மூன்று பேரை யும் பார்த்தவாறு நடந்தான். அவர்களில் இருவர் பேச்சையும் அவன் ரசித்ததால் உண்டான மகிழ்ச்சி அவன் உதடுகளில் முறுவல் தீட்டியிருந்தது. கண்களில் பேசியிருக்கலாம்.

'ஐயோடி! ஏன் நீ அப்படிச் சொன்னே? அவர் காதில் விழுந்திருக்கும். அவர் சிரித்துக்கொண்டே போகிறார்' என்றாள் தங்கை.

அந்த வீட்டைக் கடந்துவிட்ட சந்திரன் காதில் இதுவும் தெளிவாக விழுந்தது. மறுபடியும் பெரிய அக்காள் கிண்டலாக ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்த அவன் ஏமாந்தான்.

சந்திரனின் மனம் அம்மூன்று பேரையுமே சுற்றிக் கொண்டிருந்தது. இந்தப் பெண்ணுக்குக் கண்கள் தான் வெகு அழகு. கனவு காண்பது போன்ற ஓவியக் கண்கள். ஏதோ போதையில் கிறங்கி நிற்பனபோல் தோன்றும் சொக்கழகு விழிகள்' என்று முன்பு பல முறை கொடுத்த சர்ட்டிபிகேட்டை மீண்டும் படித்தது. 'பாவாடை தாவணி இவளுக்கு எடுப்பாக, எழிலாக இருக்கிறது. இந்தப் பெண் நெட்டையாக வளரக்கூடும். அவள் உடல்வாகு அப்படித்தான் தோன்றுகிறது' என்றும் மனம் பேசியது.

அந்தப் பெண்ணை மட்டும் தான் அவன் அடிக்கடி பார்த்தான் என்பதில்லை. 'உன்னை லவ் பண்ணுகிறாரோ என்னவோ' என்று கொன்னாளே பெரிய அக்காள், அவள் கூடத்தான்.அவன் பார்வையில் அடிக்கடி பட்டிருக்கிறாள்.