பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடைந்த கண்ணாடி 151

காந்திமதியின் எலுமிச்சம்பழ நிற முகம் தக்காளிப் பழமாய்ச் சிவப்பேறி மினு மினுத்தது. அவள் கண்கள் பனித்தன. 'போங்கம்மா, விளையாட்டிலே இப்படித்தான் பண்றதாக்கும்?' என்று சீற்றம் காட்டினாள் அவள்.

"நாங்க என்னடி செய்தோம்? நீ எங்களில் யாரையும் பிடிக்காமல், உன் அத்தானை ஆசையோடு கைப்பிடித்துக் கொண்டால் அதுக்கு நாங்க என்ன பண்ணுவோம்?" என்று ஒரு வாயாடி கத்தினாள்.

"அதுதானே? விளையாட வந்து விட்டு இப்போ கோபிக்கிறதிலே அர்த்தமே கிடையாது!’ என்றான் சந்திரன்.

‘'நீ பெரிய அண்ணாவி, தீர்ப்பு கூற வந்து ட்டே, உன் கிட்டே யாரும் கேட்கலே, போ!" என்று அவள் எரிந்து விழுந்தாள். 'பெண்கள் விளையாடுகிற இடத்திலே வெட்கமில்லாமே குறுக்கே வந்து விழுந்துவிட்டு...”

"அதுக்கு இப்போ என்னம்மா செய்யனும்கிறே? என் கண்ணைக் கட்டி விடணும்னு சொல்றியா? கட்டி விடு. நீ என்னைப் பிடிச்சதுமாதிரி, நானும் பதிலுக்கு உன்னைப் பிடித்து...”

தோழிகள் 'டோடோய்!' என்று கூச்சலிட்டுக் கைகொட்டிப் பலத்த ஆரவாரம் செய்தார்கள். காந்திமதி ஓடிப் போய் ஒளிந்து கொண்டாள். அதன்பிறகு அவள் அவன் முன் இரண்டு நாட்கள் தென்படவில்லை. இருந்தாலும், அவளுக்கு அவன்மீது கோபமில்லை என்பதை அவள் வாயினாலேயே அவன் பின்னர் அறிந்து கொண்டான்.

தனது ஆசை அத்தான் என்ன குறும்பு பண்ணினாலும், அவளுக்குக் கோபமும் வேதனையும் கண்ணீரும் பொங்கி எழும்படி குறும்புகள் செய்தாலும், காந்திமதி அன்போடு சகித்துக் கொள்ளுவாள். அது சந்திரனுக்கு நன்றாகத் தெரியும்.

காந்திமதி பன்னிரண்டு வயசுச் சிறுமியாக இருந்தபோது வீட்டுத் தோட்டத்திலிருந்த மாமரத்தின் தாழ்ந்த கிளையில் ஒற்றைக் கயிற்றை நீளமாகக் கட்டி ஊஞ்சல் அமைத்திருந்தாள். அதில் அமர்ந்தும், நின்றும் வேகமாக ஆடுவதில் அவளுக்கும் அவள் சிநேகிதிகளுக்கும் ஆர்வம் அதிகம் உண்டு. வீட்டு வேலைகளைச் செய்து முடித்த பிறகு, எந்நேரத்திலும் அவர்கள் தோட்டத்தில் தான் காணப்படுவார்கள். ஒரு நாள் தோழிகளின் வருகையை எதிர்நோக்கியபடி, காந்தி தனியாக ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள். தற்செயலாக அங்கு வந்து சேர்ந்தான் சந்திரன். அவளையறியாமல் பின்புறம் சென்று, அவளைத்