பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 வல்லிக்கண்ணன் கதைகள்

எனக்கு ஆசையாக இருக்கிறது, காந்தி!' எனச் சொல்லியிருப்பான்.

மூன்று வருஷங்களுக்கு முன்பு நடந்த அவ்வேடிக்கை நித்தியப் பசுமையோடு அவன் நினைவில் நின்றது. அப்பொழுது காந்திமதிக்குப் பதினான்கு வயசு ஆரம்பித்திருந்தது. அவளும் அவளை ஒத்த வயசுப் பெண்களும் வீட்டு முற்றத்தில் 'ஒடிப் பிடித்து' விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாலை நேரம். பெரியவர்கள் தலைகாட்டாத இடம். சந்திரனும் அவன் நண்பனும் எங்கோ திரிந்துவிட்டு வந்தார்கள். காந்திமதியின் கண்கள் துணியால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தன. அவள் இரு கைகளையும் முன் நீட்டி, காற்றில் துழாவி யாராவது பிடியில் சிக்குவார்களா என்று தேடித் திரிந்து கொண்டிருந்தாள். தோழிகள் ஆளுக்கொரு இடத்தில் பதுங்கி நின்று குரல்கொடுத்தும் முன்னே வந்து அவள் கைவிச்சுக்கு எட்டாத தூரத்தில் நின்று குதித்துக் கேலி பேசி ஏய்ப்பு காட்டியும் களிப்புற்று ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கே கலகலப்புக்கும் கூச்சலுக்கும் குறைவில்லை.

'ஏ, சந்திரா காந்தி யாரையோ தேடுகிறாளே! உன்னைத் தானோ என்னமோ!' என்று நண்பன் கேலி பண்ணினான்.

சந்திரனின் இயல்பான குறும்புத்தனம் வாலாட்டவே, "சத்தம் போடாதே, நான் ஒரு வேடிக்கை பண்ணுகிறேன்" என்று சொல்லிவிட்டு முன்னால் நகர்ந்தான். 'பேசாதீங்க, ஒன்றும் சொல்ல வேண்டாம்' என்று வாயை விரல்களால் பொத்தி ஜாடை காட்டித் தோழிகளை எச்சரித்து விட்டு, காந்தியின் முன்னால் போய் நின்றான்.

அவனைக் கண்டதும் மற்றப் பெண்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். என்ன நடக்கிறது, பார்க்கலாமே என்ற துடிப்பு அவர்களுக்கும் இருந்தது.

சந்திரன் அப்படியும் இப்படியும் நகர்ந்து சிறிது 'பாய்ச்சல் காட்டி' விட்டு நின்றான். முன் நீண்டு, அகப்படப் பிடிக்க வேண்டும் என்ற தவிப்போடு துழாவிய வளைக்கரங்கள் இரண்டும் அவனை நெருங்கின. 'இதோ பிடித்தாச்சு!' என்று உற்சாகத்தோடு கூவியவாறே காந்தி அவன் கையைப் பற்றினாள். -

'ஒகோய்!' 'காந்தி மாப்பிள்ளையைப் பிடித்து விட்டாள் டோய்!' 'காந்தி அது யாருடி!' - இப்படிக் கூச்சலிட்டும், கனைத்தும் கத்தியும் தோழிகள் ஆரவாரித்தனர். "சரி, புடிச்சாச்சு! அப்புறமென்ன காந்தி’ என்று கேட்டுக் கொண்டே அவள் கண்கட்டை அவிழ்த்து விட்டான் சந்திரன்.