பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடைந்த கண்ணாடி 153

அவள் அப்பா அம்மாவிடம் சொல்லி விடுவாள்; தனக்குச் சரியானபடி ஏச்சு கிடைக்கும் என்று நிச்சயமாகப்பட்டது அவனுக்கு. அதனால் அவன் நேரே வீட்டுக்குப் போகாமல் ஆற்றங்கரைப் பக்கம் சென்று பொழுதை ஓட்டினான். அவன் மனக் குறுகுறுப்பு தணியவில்லை. இருட்டும் வேளையில் அவன் வீடு வந்தான். "ஏ சந்திரா, இங்கே வா. காந்தி முகத்தை நீயே பாரு!' என்று குரல் கொடுத்தாள் அவன் அம்மா.

அவன் குற்றம் செய்த நெஞ்சுச் சுமை அழுத்த, என்னவோ ஏதோ என்ற கலவரம் தள்ள, மெதுவாகச் சென்றான். காந்தி நடந்துள்ள, அனைத்தையும் சொல்லியிருப்பாள், இப்பொழுது உரிய 'மண்டகப்படி' கிடைக்கும் என்றும் மனம் அரித்தது.

காந்திமதியின் நெற்றி புடைத்திருந்தது. முகமே வீங்கிவிட்டது போல் தோன்றியது. சந்திரன் பயந்துகொண்டே வந்ததைக் கவனித்த அவள் உதடுகளில் சிறு சிரிப்பு ஊர்ந்தது. அவள் அவனைப் பார்த்த பார்வையிலும் ஏதோ அர்த்தம் மறைந்து கிடந்தது. அவன் உள்ளத்தில் பயம் நிறைந்திருந்த போதிலும், அவளுக்காக அனுதாபமும் கவலையும் கொள்வதற்கும் இடம் இருந்தது.

'ஊஞ்சல் என்ன ஊஞ்சல் வாழுது! அப்படியே ஆட நினைச்சாலும் வீட்டுக்குள்ளே சங்கிலிகளையும் ஊஞ்சல் பலகையையும் மாட்டி, ஏறியிருந்து ஆடுறது. மரத்திலே கயிற்றைக் கட்டிக்கொண்டு ஆடுவானேன்? கயிறு அறுந்து கீழே விழுவானேன்? நல்ல காலம், இலேசாகப் போயிட்டுது...' சந்திரனின் அத்தை தன் மகளைக் கண்டிக்கும் தோரணையில் பேசினாள்.

அவள் பேச்சுக்கு விளக்கம் கொடுப்பது போல் அவனுடைய தாய் விஷயத்தை எடுத்துச் சொன்னாள். கயிற்றில் உட்கார்ந்து வேகமாக ஊஞ்சல் ஆடியபோது, கயிறு அறுந்து அவள் தானாகக் கீழே விழுந்துவிட்டதாகக் காந்திமதி அம்மாவிடம் சொல்லியிருக்கிறாள். இதைப் புரிந்து கொண்டதும் அவன் அதிக மகிழ்வு கொண்டான். காந்தி பேரில் அவனுக்கு இருந்த பிரியமும் அதிகரித்தது. அவன் நன்றியோடு அவளைப் பார்த்தான். அவள் கண்களில் குறும்புத்தனம் சுடரிட்டது. அவளிடம் கேலியாக ஏதாவது சொல்லவேண்டும் என்று அவன் மனம் துடித்தது. ஆனால், அப்படி ஏதாவது சொல்லப் போனால் அவள் கோபம்கொண்டு உண்மையை அறிவித்து விட்டால்? அந்தப் பயம் அவன் வாய்க்குத் தடை போட்டது. சில அனுதாப வார்த்தைகளைத் தான் சொல்ல முடிந்தது அவனால்.