பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 வல்லிக்கண்ணன் கதைகள்

"அவளுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று உங்களுக்கு எப்படித் தெரியுமாம்?"

"இந்த நாட்டு வாசகப் பெருமக்களில் ஒரு நபர் தானே உன் அக்காளும்! இந்நாட்டில் உள்ள வாசமணிகளும் ரசிகப் பெருமக்களும் எந்தவிதமான பத்திரிகைகள் புத்தகங்கள் எழுத்துக்களை ஆசையோடு படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாதா, என்ன?”

"சரியான போர்! ஒரு சின்னப்பெண்ணிடம் எப்படிப் பேசணும்னுகூடத் தெரியாத மண்டு!” என்று 'சர்டிபிகேட்' கொடுத்தாள் அவள்.

இந்த விஷயத்தை அவள் அக்காளும் அறிந்துதானிருந்தாள்.

ஒரு சந்தர்ப்பத்தில் ராஜம் அங்குமிங்கும் தீவிரமாகத் தேடினாள். "என்ன தேடுகிறாய்?" என்று கேட்கவும், "தின்கிறதுக்கு ஏதாவது பிஸ்கட், மிட்டாய், சாக்லேட்னு வாங்கி வைக்கப்படாது?" என்றாள்.

"உனக்குப் பிடிக்கக்கூடியதாக எதுவும் இந்த அறையில் இருக்காது. நான் வாங்கி வைத்திருக்கிற மிட்டாய் உனக்குப் பிடிக்கவும் பிடிக்காது!”

'அது உங்களுக்கு எப்படித் தெரியும்? அது என்ன மிட்டாய்?" என்று ஆர்வத்தோடு கேட்டாள் அவள்.

'பாரியின் ஜிஞ்சர் கேப்ஸ். சரியான இஞ்சி மிட்டாய்!"

"இஞ்சியா? அதை நீங்களே துன்னுங்க!' என்று எரிச்சலுடன் கூறி, வாயைச் சுளித்துப் பழிப்புக் காட்டினாள் அச்சிறுமி.

"வலிச்ச மோறையும் சுழிச்சுப்போம்!” என்று நான் கேலியாகச் சொல்லவும், போனாப் போகட்டும். உங்க மோறை நல்லாயிருந்தால் சரிதான்!' என்று எரிந்து விழுந்துவிட்டு வெளியே ஒடினாள்.

சில தினங்களுக்குப் பிறகு, அவள் 'நாளைக்கு நாங்க ஊருக்குப் போகப்போறோம்’ என்று அறிவித்தபோது, 'கெட்ட கழிசடையின் நல்ல நீக்கம்!' என்று சொல்லத் துடித்தது என் நா.

அதை நான் சொல்லியிருந்தால், 'good riddance of bad rubbish' என ஆங்கிலத்தில் எண்ணியதை எப்படியோ தமிழில் சொன்னதாகத்தான் அமையும். அவள் உங்களுக்கு சரியாக, புரியும்படியாகப் பேசவே தெரியலே. இதை நூறுவாட்டி நான் சொல்லியாச்சு!’ என்று தான் பதில் கூறுவாள். என் மெளனத்துக்கு அது மட்டும் காரணமல்ல. உயிர்த்துடிப்பு