பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 வல்லிக்கண்ணன் கதைகள்


விறகு' வாங்குகிறபோது, கை வண்டியில் கட்டைகளை அடுக்கி தள்ளிக்கொண்டுபோய் அவரவர் வீட்டில் சேர்க்கவேண்டும். கடைக்காரர். துரத்துக்குத் தக்கபடி, இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று கணக்குப்பண்ணி விறகுக் கிரயத்தோடு வாங்கிக் கொள்வார். வண்டியில் விறகை அடுக்கி, தள்ளிச்சென்று உரிய வீட்டில் இறக்கிப்போடும் ரங்கனுக்கு எட்டனா - அதிகம் போனால், ஒரு ரூபாய் கொடுப்பார்.

இதற்கும் ரங்கன் இணங்கிப் பணிபுரியத்தான் செய்தான். உரிமையோடு கேட்டு வாங்கக் கூடிய துணிச்சல் அவனிடம் கிடையாது.

வாடிக்கைக்காரர் சிலர், இரக்கப்பட்டு, அவனுக்கு நாலணா, எட்டனா கொடுப்பது உண்டு. இந்தா டீ வாங்கிக் குடி போ!' என்று தாராளம் காட்டுவார்கள். இதனால் ரங்கன் இதரர்களிடம் காசு எதிர்ப்பார்ப்பான். சிலரிடம் வாய் திறந்து கேட்கவும் செய்வான்.

அவர்கள் முறைப்பார்கள். வள்ளெனப் பாய்வார்கள். 'அது தான் கடையிலேயே குடுத்தாச்சே. அவர்தான் உனக்குப் பணம் தருவாரே! நாங்க ஏன் தனியாக் காசு தரணும்? பேராசைதான் உனக்கு’ என்பார்கள்.

“எத்தினி கஷ்டப்பட்டு வண்டியைத் தள்ளிக்கிட்டு வாறேன்! வெயிலு என்னமாக் கொளுத்துது! ஒரு எட்டனா குடுத்தா என்னவாம்? நாம படுற கஷ்டம் கடைக்காரருக்கு எங்கே தெரியுது? விறகுவிலையை அவருகூட்டிக்கிட்டே போறாரு. நம்ம கூலியை மட்டும் அதிகப்படுத்த மாட்டேங்கிறாரு. ரெண்டு வருசத்துக்குமுந்தி என்ன தந்தாரோ, அதையே தான் இன்னிக்கும் தாறாரு...'

இவ்விதம் ரங்கனின் மனம் முன முனக்கும். அதை ஒலி பரப்ப அவனுடைய நாக்கு புரளாது.

'இது முதலாளி காதிலே விழுந்தா, உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணான்கிற கதை ஆகிப்போகும்’ என்று அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வான்.

அடிமையாக உழைத்த அவன் அடிமைத்தனத்தோடேயே நடந்து கொண்டான். தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய - எதிர்க்கக் கூடிய தெம்பும் திராணியும் அவனிடம் இல்லாதவை என்றே மனசில்படும் அவனைப் பார்க்கிறவர்களுக்கு. -

பலவிதமான அவமானங்களுக்கும். பழிப்பு பரிகாசங்களுக்கும் ஆளாகிவந்த அந்த 'அப்பிராணிப் பயல்’ கூட