பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பீரஜன்னி 197

நிறைவேறி விடும். எண்ணுகிறவர் உள்ளத் திண்மை உடையவர் என்றால் எல்லா எண்ணங்களும் சித்தியாகிவிடும்’ என்று அவன் சொல்லிக் கொண்டான்.

அவனுடைய எண்ணங்கள் - எல்லாம் இல்லாவிடினும், ஒரு சிலவேனும் - எண்ணியவாறே எய்தும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு.

வழக்கமாக அவன் பார்வையில் படுகிற, பார்வைப் பரிமாற்றம் அளிக்கிற, பெண்களைப் பற்றி கைலாசம் எண்ணுவான். நிறையவே எண்ணி மகிழ்வான்.

'குண்டு மல்லி'யைப் பார்த்து ரொம்ப நாளாச்சே? கொய்யாப்பழம் இப்போதெல்லாம் தென்படவே காணோமே? 'டொமட்டோ பிராண்'டை இந்த வாரம் சந்திக்கவே இல்லையே? - இந்த ரீதியில் தான்.

ஆச்சர்யம்! அவனால் எண்ணப்படுகிற 'முட்டகோஸ் மூஞ்சி' அல்லது 'குடமிளகாய் மூக்கு' அல்லது 'அரிசி அப்பளாம்' அல்லது எவளோ, அவளே சில நிமிஷ நேரத்தில் அவன் எதிரே வந்து கொண்டிருப்பாள். ஸ்டைல் பண்ணிக் கொண்டு குறுகுறு பார்வை வீசியபடி.'எண்ணினேன். எதிரே வருகிறாய். வாழ்க!' என்று அவன் மனம் வாழ்த்தும்.

எந்தப் பெண்ணும் அவனைக் கண்டு மயங்கி விடுவாள்; அவன் ஆசையோடு எண்ண வேண்டியதுதான், அவள் வசப்பட்டு விடுவாள். இது கைலாசத்தின் 'பெட் ஐடியா'!

'அவனுக்கு கற்பனை அதிகம்' என்றார்கள் அவன் நண்பர்கள். 'இது ஒரு மாதிரிப் பித்து'

அவன் வசித்த வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு பெண் இருந்தாள். 'மிஸ் யுனிவர்ஸ்' 'மிஸ் இந்தியா' என்றெல்லாம் அவளை வியந்துவிட முடியாது. 'மிஸ் அந்த வட்டாரம்' 'இத்தெருவின் இணையற்ற பியூட்டி' என்று கூடச் சொல்ல இயலாது. இருந்தாலும் அவள் வசீகர பொம்மையாக விளங்கினாள் கைலாசத்தின் கண்களுக்கு. அவளுடைய அடக்கம் ஒடுக்கம் வகையரா அவனுக்கு மிகுதியும் பிடித்திருந்தன.

இவளை அவன் அடிக்கடி பார்ப்பது உண்டு. அவளும் பார்ப்பது வழக்கம்தான். அதீதப் பார்வையில் பொருள் பொதிந்த தனிமொழி நீச்சலடிக்கிறது என்று கைலாசம் கருதினான். என்ன மொழி, தெரியாதா! காதல் மொழியேதான்.