பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

193 வல்லிக்கண்ணன் கதைகள்

அவளிடம் பேசுவதற்கு அவனுக்கு வெட்கம், கூச்சம், தயக்கம் எல்லாம் தான். அவன் தான் சங்கோஜி ஆயிற்றே! ஆகவே, தன் காதலைக் கொட்டி அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான். தொடர்ந்து இரண்டு கடிதங்கள் அனுப்பினான். அவளிடமிருந்து பதில் எதுவும் வரவில்லை.

அதற்காக அவன் எண்ணங்கள் வளராமல் ஒடுங்கியா கிடக்கும்? கைலாசம் அவளோடு கைகோத்து கடற்கரை மணலில் பிற்பகல் மூன்று மணிக்கு உலா போனான். இரவில் சினிமாவுக்குச் சென்று மகிழ்ந்தான். திருவான்மியூர், திருவொற்றியூர் கடலோரத்தின் தனிமை இடங்கள் பலவும் அவ்விரு வரையும் அடிக்கடி காணும் பேறு பெற்றன. ஒரு ஒட்டலில் இரண்டு பேரும் தங்கினார்கள். இன்பமாவது இன்பம்! ஆகா ஆகாகா:

இவை எல்லாம் நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் தான், அவன் எண்ணத்தில். எண்ணம் ஜிகினா வேலை செய்தது. அவனுக்கே பொறுக்கவில்லை. நண்பர்கள் பலரிடமும் இவற்றை சுவையாக அளந்து தள்ளினான் கைலாசம்.

இவ்விஷயம் அந்தப் பெண்ணின் தந்தை காதையும் எட்டி விட்டது.

அவர் முரடர். அந்த வட்டாரத்தின் ரெளடி. அவர் மகளை மிரட்டினார். உண்மை புலனாயிற்று. அந்தப் பெண் ரொம்ப சாது. அவள் பேரில் தவறே இல்லை. தந்தை நேரே கைலாசத்தைத் தேடி வந்தார். அவன் கழுத்தைப் பிடித்து உலுக்கி, கன்னத்தில் இரண்டு அறை கொடுத்தார். 'அயோக்கியப் பதரே! உனக்கு ஏண்டா இந்தப் புத்தி? அறியாப் பெண் ஒருத்தி பேரை அநியாயமாகக் கெடுத்துக் கொண்டு திரிகிறாயே. இதிலே உனக்கு என்னடா லாபம்? அவள் வாழ்க்கையே கெட்டுப் போகுமேடா. இதுவா ஒரு விளையாட்டு? இனிமலோவது ஒழுங்காக நடந்து கொள்!' என்று முதுகில் இரண்டு குத்து விட்டார்.

'ஐயோ சாமி, செத்தேன்!' என்று அலறி விழுந்தான் கைலாசம்.

'அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான்! இனிமேல் பையன் தங்கக் கம்பி ஆகிவிடுவான், பாருங்கள்!' என்று உறுமி விட்டுப் போனார் முரட்டுப் பேர்வழி.

அந்த வேளைக்கு அப்பாவி கைலாசம் எண்ணங்களை வளர்க்கவில்லை. அந்த ஆசையும் எழவில்லை. சுடுகாட்டையும்