பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

பிஸ்கட்டோ அன்றி வேறு எதுவுமோ வாங்கி வரவேண்டும் என்று எண்ணவும், கொண்டு வரமாட்டார்களா என்று எதிர் பார்க்கவும் தொடங்கியது அவன் மனம்.

விநாயகம் பிள்ளை வெறும் கையராய்தான் வந்திருந்தார். 'ஒண்ணுமே வாங்கி வராம வந்திருக்கான் பாரு! சீக்குக்காரனை பார்க்க வாறவன் ஏதாவது வாங்கி வரவேணாம்?' என்று அவன் மனம் முணுமுணுத்தது.

அவர் அவனைத் தலையோடு காலாகப் பார்த்தார். அருகில் மேஜை மீது, சன்னல் விளிம்பில், மற்றும் ஸ்டுல் மீது இருந்த புட்டிகளையும் பொட்டலங்களையும் ஒரு பார்வையில் விழுங்கினார். அறை முழுவதையும் கண்களால் தடவினார். அவன் அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

வழக்கமான கேள்விகள் பிறக்கும்; ஆதரவும் அனுதாபமும் பொதிந்த பேச்சுகள் ஒலிக்கும் என்று எதிர்பார்த்த கைலாசம் ஏமாற்றமே அனுபவித்தான்.

விநாயகம், பொதுவாக எல்லோரும் நோயாளிகளிடம் விசாரிப்பதுபோல, 'எப்படி இருக்கிறே? என்ன செய்யுது? ரொம்பக் கஷ்டப்பட்டுப் போனியா? இப்ப தேவலையா?” என்ற ரீதியில் கேள்விகளை அவனிடம் கேட்கவேயில்லை. 'ரொம்ப மெலிஞ்சு போயிட்டியே உடம்பைக் கவனிச்சுக்கோ' என்பது போன்ற உபசார மொழிகளும் பேசவில்லை.

அவர் சகஜமாகப் பேசுவது போலவே இப்போதும் பேசினார். 'வாற வழியிலே ஒரு குதிரையைப் பார்த்தேன். அதல்லவா குதிரை! மினுமினுன்னு, கறுப்பு நிறத்திலே, நெற்றியிலே வெள்ளை படிந்து, டாக் டாக்குனு நடைபோட்டு வந்தது. எவ்வளவு ஜோரா இருந்தது தெரியுமா? ஏ, நீ ஆயிரத்தைச் சொல்லு. மோட்டாரு, பைக்கு, ஸ்கூட்டரு பற்றி பெருமையாப் பேசு. வேண்டாம்கலே. ஆனா குதிரை மேலே சவாரி போற அழகுக்கு அதெல்லாம் ஈடாகாது. என்ன மிடுக்கு, என்ன கம்பீரம், என்ன நடை! நீ அதை கண்ணாலே பார்த்திருக்கணும். எப்பவுமே எனக்கு ஒர் ஆசை. அருமையான குதிரை வாங்கி, தினம் அது மேலே ஏறி உல்லாசமா ஊரைச் சுத்தி வரணும்... கொடுத்து வைக்கலே... எதுக்கும் கொடுத்து வச்சிருக்கணும் டேய்!'

கைலாசம் பெருமூச்செறிந்தான். சும்மா புரண்டு படுத்தான்.

அதை அவர் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லலை. உற்சாகமாக வார்த்தைகளைக் கொட்டினார்.