பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருமை 231

மகிழ்வண்ணம் பிள்ளை வீட்டினுள்ளிலிருந்து அரிக்கன் லாந்தரை எடுத்துக் கொண்டு இரண்டு பேர் வந்தனர். அண்டை அயல் வீட்டுக்காரர்கள் சிலரும் தடிகள் வேல்க்கம்புகள், வெட்டரிவாள்களோடும் வெளிச்சங்களோடும் வந்து சேர்ந்தார்கள்.

குண்டடி பட்டு, ரத்தத்தில் விழுந்து, செத்துக்கிடந்த தடிப்புலி ஒன்றை எல்லோரும் கண்டார்கள்.

’ஏ கடுவா! கடுவா செத்துப் போச்சு!' 'மகிழ்வண்ணம் அண்ணாச்சி புலியைச் சுட்டுக் கொன்னு போட்டாங்க!'

'ஒரே சூடு. புலி அவுட்! சரியானகுறி.'

குறி லேசாகத் தப்பியிருந்தால், அண்ணாச்சி கதி என்னாகி யிருக்கும்? எவ்வளவு பெரிய கடுவா! இதுவந்து மேலே பாய்ஞ்சாலே ஆளு குளோஸ் ஆக வேண்டியது தான். அண்ணாச்சி ரொம்ப தைரியசாலி. தன்னந்தனியா: பெரிய புலியை குறிவச்சுச் சுட்டுவிட்டாகளே!...

இவ்வாறு இன்னும் பலவிதமாகவும் பேச்சுகள் ஆரவாரமாக எழுந்தன. புலியை பத்திரப்படுத்திவிட்டு: நாளை காலையில் பார்க்கலாம் என்று எல்லோரும் போனார்கள்

கதவுகளை நன்றாக சார்த்தி, அடிப்பூட்டு: மேல்பூட்டு: 'அடி தண்டா' எல்லாம் போட்டும், உள்ளுற சிறு பயம் அரிக்கவே 'லைட்டுகளை அணைக்க வேண்டாம். விடியவிடிய எரியட்டும்’ என்று சொன்னார். பிள்ளை. பிறகு தனிமையில் மனைவி மீனாட்சியிடம் அவர் இயல்பாகத் தெரிவித்தார்

'எனக்கு அது புலியின்னே தெரியாது. கறுப்பா என்னமோ அசைஞ்சது. அவ்வளவுதான் தெரியும். அது நாயா, ஆடா, பன்றியாயின்னு கூட புரியலே. எதுவாகவும் இருக்கட்டும்னு தான் சுட்டுவச்சேன். அது இவ்வளவு பெரிய புலியுன்னு தெரிஞ்சிருந்தா நான் தைரியமா நின்னுசுட்டிருப் பேனா என்கிற சந்தேகம் எனக்கு இப்பகூட இருக்கு!’

உலகத்தை அவரைவிட அதிகம் நன்றாக புரிந்து வைத்திருந்த அந்த தர்ம பத்தினி: 'வாயை மூடிக்கிட்டு இருங்க. இப்படி இனிமே யார்கிட்டேயும் உளறிவைக்காதீங்க வேணுமினா, புலி எப்படி உறுமிச்சு பாய வந்தது ஒரே குண்டுலே எப்படிச் செத்து விழுந்துதுன்னு அளந்து விடுங்க. கூச்சமோ தயக்கமோ வேண்டாம்', என்று உபதேசம் புரிந்தாள்