பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238 வல்லிக்கண்ணன் கதைகள்

சொன்னபடி நடக்குதா இல்லையான்னு பார்த்துப் போடுவோமே! என்றார்,

'அதெல்லாம் எதுக்குங்ஞேன். சும்மா பேச்சை விடுங்க. ஏதோ பொழுது போக்காப் பேசுறோம்...' என்று நண்பர் இழுத்தார். -

ஞானப்பிரகாசத்துக்கு ஆங்காரம் வந்துவிட்டது. இந்த ஞஞ்ஞமிஞ்ஞ விவகாரமே வேண்டாம். இது ஒரு சவால்' என்று சொல்லி, தாளும்பேனாவும் எடுத்து, ஒவ்வொரு பிள்ளையின் பெயரையும், அப்பா பெயர், வயசு முதலிய விவரங்களையும் கேட்டு எழுதினார். ஒவ்வொருவருக்கும் அடையாளமாகச் சில குறிப்புகளையும் இணைத்துக் கொண்டார்.

அங்கே பதினாறு பிள்ளைகள் இருந்தார்கள் ஆண்களும் பெண்களுமாக, பத்துவயசு முதல் பதினைந்து வயசு வரை உள்ளவர்கள். அவர்களை நன்கு கவனித்து, விவரங்களைக் கேட்டறிந்து, பிற்காலத்தில் அவர்கள் என்ன ஆவார்கள், என்ன நிலைமையில் இருப்பார்கள் என்று தீர்க்கதரிசனமாகக் கூறி, அப்படியே எழுதியும் வைத்துக்கொண்டார் அவர்.

அப்புறம் இது விஷயமாக அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

விரைவிலேயே ஞானப்பிரகாசம் அந்த ஊரை விட்டுப் பிரிந்து போக நேர்ந்தது. வாழ்க்கைப் பாதையில் எங்கெங்கோ அலைந்து திரிய நேரிட்டது. அவ்வூரிலிருந்து செய்திகள் எட்ட முடியாத தொலைவிலே அவர் பல வருடங்கள் தங்க வேண்டியதாயிற்று. முதலில், அபூர்வமாக எப்போதாவது கனகசபையிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருந்தது. போகப் போக அவரும் எழுதுவதை நிறத்திவிட்டார்.

'அங்கே ஒரு தடவை போய் வரணும்' என்று ஞானப்பிரகாசம் வருடம்தோறும் நினைப்பது உண்டு. ஆனாலும் வாழ்க்கை நிலைமைகளும், சந்தர்ப்பங்களும் பிறவும் அவருக்கு உதவி புரியாததனால், அந்த யாத்திரை சுலபத்தில் சித்திக்காத ஒரு லட்சியம் போலவே அமைந்து கிடந்தது.

அவர் அந்த ஊரையும், அவ்வூர் பிள்ளைகளையும் மறந்து விடவில்லை. 'எல்லாரும் நல்ல படியாகத் தான் இருப்பார்கள். நான் சொன்ன மாதிரி வாழ்க்கை அவர்களுக்கு அமைந்திருக்கும்' என்று அவர் எண்ணிக் கொள்வார். 'போகனும், பத்து வருடங்களுக்கு மேலேயே ஆச்சுதே, எல்லோரும் எப்படி இருக்காங்க என்பதை அறிவதற்காகவாவது ஒரு தடவை அந்தப் பக்கம் போய் வரத்தான் வேண்டும்' என்று நெஞ்சோடு புலம்பிக் கொள்வார். - .