பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முளையும் - விளைவும் 239

ஒருநாள், வாழ்க்கை உண்மை ஒரு அதிர்ச்சி மாதிரி அவரை எதிர்கொண்டது.

அவர் வசித்த பெருநகரத்தின் முக்கிய ரஸ்தா வழியாக அவர் 函L一函函 கொண்டிருந்த போது, எதிரே வந்த இளைஞன் அவரைப் பார்த்தான். நின்றான். முகம் மகிழ்ச்சியுற, 'வணக்கம் ஐயா' என்று கும்பிட்டான். 'என்னைத் தெரியுதா ஐயா?’ என்று கேட்டான்.

அவர் அவனை கவனித்தார். அவனைப் பார்த்திருந்ததாக அவருக்கு நினைவு இல்லை. 'தெரியலியே... யாரு?' என்றார்.

'மறந்திருப்பீங்க. பத்து பதினொரு வருஷத்துக்கு முந்திப் பார்த்தது. அப்ப நான் சின்னப் பையனாக இருந்தேன். ஆனால் உங்களை இனம் கண்டு கொள்றது சிரமமாக இல்லை. நீங்க அப்படியே தான் இருக்கீங்க' என்றான் அவன்.

‘இவன் யாரு இவன்? ரொம்பத் தெரிஞ்சவன் மாதிரிப் பேசுதானே!' எனற தயக்கத்தோடு நின்ற பெரியவருக்கு தெளிவு ஏற்படுத்தும் விதத்தில் அவன் சொன்னான்.

'கனகசபை வாத்தியார் வீட்டிலே நான் பாடம் படிக்கையிலே நீங்க அடிக்கடி வருவீங்க. என் பேர் நடராஜன்...'

'ஒகோ, அப்படியா ரொம்ப சந்தோஷம். வாத்தியார் எப்படி இருக்கார்? நீ இங்கே என்ன பண்ணுறே? எப்போ வந்தே? என்று உற்சாகத்தைக் கொட்டலானார் அவர்.

'நீங்க அப்புறம் அந்தப் பக்கம் வரவே இல்லையே, ஐயா. எங்க ஊரையும் எங்களையும் அடியோடு மறந்துட்டீக போலிருக்கு!’

'மறக்கவாவது ஒண்ணாவது! நேரமே கிடைக்கலே தம்பி. போகனும், கண்டிப்பா ஒரு தடவை போக வேண்டியது தான். அந்த ஊரும் ஆட்களும் இருக்கிற நிலையை பார்க்கப் போகணும்கிற தவிப்பு எனக்கு எப்பவும் இருக்கு நேரம்தான் கிடைக்கலே’ என்று பெரியவர் அங்கலாய்த்தார்.

'நீங்க சொன்ன ஒரு வியாழவட்டம் சீக்கிரமே ஆகிவிடும். அப்போ போய் பாருங்க!' என்று சொன்ன நடராஜன் ஒரு மாதிரிச் சிரித்தான். -

'என்னடே, என்ன விஷயம்?' என்றார் அவர்.

'அதை எல்லாம் நீங்களே கண்டறிவதே நல்லது' என்று அவன் சொன்னான்.

'ஆமா, நீ என்ன செய்வதாகச் சொன்னே?'