பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 வல்லிக்கண்ணன் கதைகள்

இங்கே ஒரு கம்பெனியிலே குமாஸ்தா வேலை பாக்கிறேன்

'எது வரை படிச்சே?'

'எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்தேன். மேலே படிக்க வசதி இல்லே, வேலை தேடி அலைஞ்சேன்...'

'குமாஸ்தா வேலைக்காக இவ்வளவு தூரம் வரணுமா?' என்று கேட்டார் அவர்.

'இப்போ இந்த வேலை கிடைப்பதே பாக்கியம்னு தோணுதே. குமாஸ்தா வேலைக்காக டில்லி, பம்பாய், கல்கத்தான்னு போறாங்களே! எனக்கு இங்கேயே கிடைத்தது நல்வாய்ப்புதான்!' என்றான் இளைஞன். உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி. நான் போய் வாறேன்' என்று வணங்கிவிட்டு நகர்ந்தான்.

'நல்ல பையன்’ எனப் பாராட்டியது அவர் மனம்.

அவர் தனது இருப்பிடம் சேர்ந்ததும், முதல் காரியமாக புத்தகப்பெட்டியைத் திறந்து ஒரு பழைய டயரியினுள் பத்திரமாக வைத்திருந்த காகிதத்தை எடுத்து, அவசரம் அவசரமாக ஆராய்ந்தார்.

'உம்...வி. நடராஜன் ஆமா சரிதான் இவன் தான... கெட்டிக்காரப் பையன், வகுப்பில் முதல். எல்லாப் படங்களிலும் நல்ல மார்க். ஆங்கிலத்திலும் தமிழிலும் எப்பவும் முதல் மார்க்குதான். அப்போது வயசு 12. சரி குறிப்பு என்ன? கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, நல்ல உத்தியோகம் அடைவான்... ஊங்? அப்படியா சங்கதி!'

ஞானப்பிரகாசம் தலையைச் சொறிந்தார். 'அடடா, அவன் எங்கே தங்கியிருக்கான்னு கேட்காமப் போனோமே! அவன் கிட்டே மேலும் பல தகவல்களை விசாரித்து அறிந்திருக்கலாமே!’ என்றொரு வருத்தம் அவர் உள்ளத்தில் குத்தியது.

சந்தர்ப்பம் அவருக்குச் சிறிது உதவியது. சில தினங்களுக்குப் பிறகு நடராஜனை அவர் மறுபடியும் சந்திக்க நேரிட்டது. ஒரு பஸ் ஸ்டாப்பில்.

'உனக்குக் கல்யாணம் ஆகி விட்டதா?’ என்று விசாரித்தார.

'கல்யாணம் செய்து கொள்வதைப்பற்றி நான்யோசிக்கவே இல்லை. குடும்ப நிலைமை, பொருளாதார நிலை, மற்றும் பல நிலைமைகளை கவனித்தபோது, என் நிலைமையில் உள்ளவன் தனியாக இருந்துவிடுவதே நல்லது என்று தோன்றுகிறது...' நம்பிக்கை வறட்சி அவன் குரலில் ஒலித்தது.