பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து 25



காலையிலேயே 'அழைப்புக்காரன்' ஆறுமுகத்தைக் கூப்பிட்டு, சிவபுரம் சுகவாசிகள் எல்லோர் வீட்டுக்கும் போய் "சித்திரா பெளர்ணமி சித்திரான்னச் சிறப்புச் சாப்பாடு" பற்றிச் சொல்லி, அழைக்கும்படி ஏற்பாடு.

வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்துக்கொண்டு இலைகளை ரெடி பண்ணி வைக்கச் சொன்னார். ஆட்கள் ஏழுமணி முதல் தயாராக இருந்தார்கள். -

ஆனால், அழைக்கப்பட்ட நபர்களில் ஒருவர் கூட வரவில்லை,

மணி எட்டு... எட்டரை... ஒன்பது என்று ஓடியது. ஊகூங். ஒரு ஆளைக் கூடக் காணோம். r

மூக்கபிள்ளை மனம் குமுறிக் கொண்டிருந்தது. அவர் முகம் ‘என்னமோ மாதிரி' மாறிவிட்டது வீட்டில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

ஒன்பதே கால்...

திரும்பவும் ஆறுமுகத்தை அனுப்பி வைத்தார்.

சுகவாசிகள் மிகுந்த சிவபுரத்தில் விசேஷமான பழக்க வழக்கங்கள், கட்டுப்பாடுகள், எத்தனையோ உண்டு. ஒரு வீட்டில் விசேஷம், விருந்து என்றால் ஊரார் எதிர்பாக்கிற சம்பிரதாயங்கள் பலவாகும்.

முதலில் விசேஷ வீட்டுக்காரரே நேரில் ஒவ்வொருவரையும் கண்டு விஷயத்தைச் சொல்லி அழைக்கவேண்டும். சாப்பாட்டையும் நம்ம வீட்டிலேயே வச்சுக்கிடுங்க” என்று வற்புறுத்தவேண்டும். விசேஷ நாளுக்கு முதல் நாள் அழைப்புக்காரன் வீடு வீடாக போய், 'நாளைக்கு இன்னார் வீட்டு விசேஷம் - தாம்பூலத்துக்கும் சாப்பாட்டுக்கும் அழைச்சிருக்கு’ என்று சொல்லிப் போக வேண்டும். அப்புறம் விசேஷத்தன்று சாப்பாடு நேரத்தில் "ஐயா, சாப்பாட்டுக்கு வாங்க இலை போட்டாச்சு' என்று அறிவிக்கவேண்டும்.

சுகவாசி வருகிறாரோ வரவில்லையோ, அழைக்கத் தவறக்கூடாது. அழைப்பு விட்டுப் போனால் அதுபெரும் தவறாகக் கருதப்படும். -

ஊர் மரபு அப்படி இருக்கையில்.

இந்த மூக்கபிள்ளை என்ன நெனச்சுப்போட்டான்? பெரிய லார்டு ரிப்பன் பேரனோ? வீட்டிலே இருந்துகிட்டு ஆள் மூலம் சொல்லி அனுப்புவானாம் நாம ஓடிப்போகணுமாம் சாப்பிடறதுக்கு! நாம என்ன சோத்துக்கு அலைந்துபோயா கிடக்கிறோம்? என்று கொதிப்புற்றனர் சிலர்.