பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270 வல்லிக்கண்ணன் கதைகள்

அந்த அறையில் எல்லாரும் நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

மீண்டும் அந்த பயங்கர அலறல் வெடித்தது. நெஞ்சின் மீது எதுவோ உட்கார்ந்து கொண்டு, கழுத்தைப் பிடித்து பலமாக அமுக்குவதால் மூச்சுத் திணறி, வேதனையால் சிரமப்பட்டு, ஓங்கிக் குரல் எடுத்துக் கத்த முயன்று, அப்படிக் கதற முடியாமல் திணறித் தவிக்கிற முறையில் அந்தக் குரல் ஒலித்தது.

தூங்கிக் கொண்டிருந்த அனைவரையும் உலுக்கி எழச் செய்தது அது.

யாரோ வேகமாக ஸ்விச்சைப் போட்டார்கள. பாய்ந்து சிந்திய வெளிச்சத்தில், அந்த அப்பாவி மனிதன் நெளிந்து புரண்டு தவிப்பது தெரிந்தது. அவர் முகம் விகாரமாகத் தோன்றியது.

'மாமா மாமா' என்று பதறித் தெறித்தன குரல்கள். 'எழுந்திருங்க, முழிச்சிருங்க' என்று துரிதப்படுத்தினார் ஒருவர்.

அந்த ஆசாமி திகைப்புடன் விழித்து எழுந்தார். திருதிருவென விழித்தபடி உட்கார்ந்தார். கால்களை மடக்கி, முழங்கால் மீது முகம் பதித்து, மற்றவர்கள் முகங்களைப் பார்க்க நாணப்படுகிறவர் போல் இருந்தார்.

'திரும்பவும் என்ன மாமா இது?’ என்று ஒரு பெண் கேட்டாள்.

'உங்களுக்கு என்ன பண்ணுது? ஏன் இப்படி பதறிப் பதறிக் கத்துறிங்க? என்று ஒருவர் விசாரித்தார்.

'உச்சிப்பட வேளையிலே எங்கேயோ பயந்திருக்கான். அது தான்' என்று ஒரு பெரியவர் சொன்னார்.

பயந்து அலறியவர் எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வது என்று புரியாத மவுனநிலையில், 'பிடித்து வைத்த பிள்ளையார்' மாதிரி அசையாது உட்கார்ந்திருந்தார்.

ஒவ்வொருவராக அலுத்துச் சலித்து தரையில் சாய்ந்தார்கள். "இன்னும் விடிய நேரம் கிடக்கு: தூங்குங்க” என்றார்கள். "விளக்கு எரியட்டும். அணைக்க வேண்டாம்" என்றது ஒரு குரல். - -

மாமாவும் உட்கார்ந்து அலுத்துப் போய் படுக்கையில் சரிந்தார். கண்களை விழித்தபடி கிடந்தார். எவ்வளவு நேரம் அப்படி இருக்க முடியும்? கண்கள் தாமாக மூடின. மெது மெதுவாக தூக்கமும் வந்தது.

சுவர்கடிகாரம் மூன்று ஒலிகளை உதறியது. அப்புறம் ஒற்றை ஒலியைச் சிந்தியது. பிறகு நான்கு ஒலிகளைக்