பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28○ வல்லிக்கண்ணன் கதைகள்

பதற்கான தடயங்கள் தெரிந்தனவே தவிர, கலகலப்போ இயக்க வேகமோ பெற்றுவிட்டதாகக் காட்சி தரவில்லை.

ஆகவே, 'சொப்பனம் இன்னம் தூக்கக் கிறக்கம் தெளியாமல் தான் இருக்கிறது' என்று மற்றவர்கள் பேசினார்கள். -

அவரவர் கவலைகளும் சோலிகளும் அளவுக்கு அதிகமாகப் பெருகிக் கிடக்கின்ற இந்நாட்களில் எல்லோரும் அந்த ஒரு வீட்டைப்பற்றியே சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாதுதானே? புதுக்குடியிருப்பு வாசிகளுக்கும் எத்தனையோ அலுவல்கள்! எவ்வளவோ கவலைகள்! அதனால் அவர்களுக்கு 'ஸ்வப்னா' விஷயம் எப்பவாவது பேசிப்பொழுது போக்குவதற்கு உதவக்கூடிய பல விஷயங்களில் ஒரு அல்ப விஷயமாகத்தான் இருந்தது.

ஆனால் ’ஸ்வப்னா என்கிற வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்த ஒரு ஆசாமிக்கு அதுவே குழப்பங்களையும் வீண் எண்ணங்களையும் விசித்திர சந்தேகங்களையும் வளர்க்கும் ஒரு விவகாரமாகப்பட்டது. கிருஷ்ணன் என்ற பெயர் உடைய அந்த நபர் சந்தேகப் பிராணியாய், அளவுக்கு அதிகமான கற்பனாவாதியாய், அறியும் அவா (க்யுரியாஸிட்டி) அதிகம் பெற்றவராய் இருந்தார். கதாசிரியராக மாறி நாவல்கள் எழுத ஆரம்பித்திருந்தார் என்றால், அவர் பிரமாதமான வெற்றிகளைமட்டுமல்லாது, அபாரமான சோதனைகளையும் மகத்தான சாதனைகளையும் செய்து முடித்து, ரசிகப்பெருமக்களாலும் விமர்சனப் புலிகளாலும் அமோகமாகப் பாராட்டப்படும் பேறு பெற்றிருப்பார். ஏனோ அவர் எழுத்துத் துறையில் புகவில்லை. அவரது கற்பனையும், சந்தேகமும், அறியும் ஆர்வமும், இன்ன பிற ஆற்றல்களும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின், அந்தக் குடியிருப்பு ஆசாமிகளின் வாழ்க்கைப் போக்குகளை துருவி ஆராய்ந்து அலசிப் பிழிவதிலேயே அவரை நாட்டம் மிகக் கொள்ளும்படி தூண்டின.

கிருஷ்ணன், உழைக்க வேண்டிய அவசியம் அதிகம் இல்லாத, ஒய்வு மிக நிறையவே இருந்த, வசதியான உத்தியோகம் ஒன்று பெற்றிருந்தார். அவர் மனைவி அவருக்கு ஏற்ற ஜோடியாகத்தான் இருந்தாள். அவர்களுக்கு பிள்ளைகுட்டி என்ற பிடுங்கல் எதுவும் இல்லை. ஆகையால் அண்டை அயல் எதிர் வீடுகளை ஆராயவும், பிறர் அக்கப்போர்கள் குறித்து வம்பளக்கவும் அவர்களுக்கு நேரம் நிறையவே இருந்தது.

"எதிர்வீட்டில் ஏதோ மர்மம் இருக்கிறது!’ என்ற எண்ணம் கிருஷ்ணன் உள்ளத்தில் விழுந்துவிட்டது.