பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடியிருப்பில் ஒரு வீடு 281

"ஆமாம். சந்தேகத்துக்கு உரிய ஆட்கள் யாரோ தான் குடிவந்திருக்கிறாங்க' என்றால் ஸ்ரீமதி சாந்தா கிருஷ்ணன்.

'கள்ள நோட்டு அச்சடிப்பவர்களாக இருக்கலாம்' என்பதில் ஆரம்பித்து, கள்ளச் சாராயம் காய்ச்சுகிறவர்கள், கள்ளக் காதலில் ஈடுபட்டவர்கள் என்பது ஈறாக, சந்தேகப் பூச்சி எதுஎதன் மீது ஊர்ந்து நெளிய முடியுமோ அதை எல்லாம் தொட்டுவிட்டது அவர்கள் ஊகம்.

'சரி. இதை திட்டமாக ஆராயாமல் விட்டுவிடக் கூடாது' என்று தீர்மானம் செய்தார் கிருஷ்ணன்.

'இதைக் கண்டுபிடிக்காமல் எதிர்த்த வீட்டிலே இருந்தால் நாம் சரியான இளிச்சவாய் சுப்பர்கள் என்றுதான் அர்த்தம்’ என்று அழுத்தம் கொடுத்தாள் அம்மாள்.

இப்படியாகத்தானே அவர்களுடைய ஆற்றலுக்கும் ஈடுபாட்டுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ற முக்கியமான வேலை அதுவாகவே வந்து அவ்விருவரிடமும் சிக்கிக்கொண்டு விட்டது.

கிருஷ்ணன் வெளியே போய்விட்டு வந்த உடனேயே, ‘என்ன, ஸ்வப்னா கதவு திறக்கப்பட்டதா? யாராவது எட்டிப் பார்த்தாங்களா? உள்ளே யாராவது போனாங்களா? என்று விசாரித்து விட்டுத்தான் இதர அலுவல்களில் இறங்குவார்.

வீட்டு அம்மாள் அவரைவிட ஒரு படி மேலே போய் அனுமானங்களையும் யூகங்களையும் உலுப்பித் தள்ளுவாள். 'அந்த வீட்டிலே ஆண்பிள்ளைகளே இல்லை. இரண்டு பெண்கள்தான் இருக்கிறாங்கன்னு தோணுது' என்றாள் ஒரு தடவை. மூணுபேரு இருப்பாங்க போலிருக்கு' என்றாள் இன்னொரு நாள். 'அழகான பெண் ஒருத்தி இருக்கிறா. வெள்ளை வெளேர்னு இருக்கிறா. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். டக்குனு கதவை. சாத்திவிட்டாள்' என்று தெரிவித்தாள் ஒரு சமயம். ஒரு வேலைக்காரி இருப்பாள் போலிருக்கு. அந்த அழகான சிறு வயசுக்காரியோட அம்மாளோ, அக்காளோ தெரியலே, ஒருத்தியும் கூட இருக்கிறாள்' என்றாள். 'பிக்சர் மாதிரி இருக்கிற பொண்ணு ஒண்ணா இரண்டா என்று எனக்கே சந்தேகம் வந்திட்டுது' என்று அவளே ஒரு சமயம் குழம்பினாள்.

யாரும் வெளியே போவதாகவே தெரியலே. இவங்களைத் தேடி எவரும் வருவதாகவும் தோணவில்லை என்று கிருஷ்ணனும் அவர் மனைவியும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கே போலும் நிகழலாயின சில சம்பவங்கள்.