பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282 வல்லிக்கண்ணன் கதைகள்

ஒரு நாள் முன்னிரவில், 'கப்பல் மாதிரி' பெரிதான ஒரு கார் மினுமினுவென்று வந்து நின்றது அந்த வீட்டின் முன்னே. அதிலிருந்து இறங்கி அவ்வீட்டுக்குள் போனவர் சரியான நீர்யானை மாதிரி இருந்தார். 'காண்டாமிருகம் என்று சொன்னாலும் சரியாக இருக்கும்!' இது சாந்தா கிருஷ்ணன் அபிப்பிராயம். தடியாய், தொந்தியும் தொப்பையுமாய், வஞ்சனையின்றித் தின்று கொழுத்த சதைக்குன்றாய் விளங்கிய அந்தப் பெரிய உருவத்தை விலை உயர்ந்த துணிகளும், வைரமும் தங்கமும் அழகுபடுத்த முயன்றன.

அவர் வந்ததும் 'ஸ்வப்னா' மிகுந்த ஒளி பெற்றது. எல்லா விளக்குகளும் எரியலாயின. சிரிப்பும் பேச்சும் கலகலத்தன. ஒரு பெண் பாடுகிற குரல் கூட எழுந்தது.

'ஸ்வப்னா ஏதோ சொப்பனபுரி மாதிரி ஆகிவிட்டதே!’ என்றுதான் கிருஷ்ணனால் கூற முடிந்தது.

வந்திருந்த பெரிய நபர் எப்போது போனார் என்பதை கிருஷ்ணனும் சாந்தாவும் தெரிந்துகொள்ள இயலாது போயிற்று. அவர்கள் படுக்கச் சென்றபோது மணி பத்தரை. அவ்வேளையிலும் பெரிய கார் எதிர் வீட்டின் முன்னால் நின்றது. பிறகு, பன்னிரண்டு மணி இருக்கலாம், கிருஷ்ணன் விழித்துக் கொண்டார். ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அங்கே கார் எதுவும் இல்லை.

'அடடா, தடியன் போயிட்டான் போலிருக்குதே! என்று அவர் வருத்தத்தோடு முனகிக்கொண்டார். திரும்பி தனது அறைக்குப் போகலாம் என்று கால் எடுத்தவர் அசையாமல் நின்றுவிட்டார். காரணம்-

அந்த வீட்டின் முன்னால் ஒரு கார் வந்து நின்றது. இது வேறு கார். சிறியது. அதன் வருகைக்காகக் காத்திருந்தவர்போல், யாரோ ’ஸ்வப்னா'வின் கதவை திறந்தார்கள். இரண்டு பேர் வெளியே வந்தார்கள்.

கிருஷ்ணன் நன்றாகக் கவனித்தார்,

இரண்டு பெண்கள். ஒருத்தி அதிக வயசு உடையவள் என்றும், மற்றவள் இளம் பெண் என்றும் புரிந்து கொள்ள முடிந்தது. சின்னவள் முகம் தெரியவில்லை. நேர்த்தியான மென் துகில் அணிந்திருந்தாள். அதைத் தலைக்கு மேல் இழுத்து முக்காடாகப் போட்டிருந்தாள். நிலவு நன்றாகத்தான் இருந்தது. அந்த நிலவொளியில் அவள் அழகு மிகுந்த உருவமாகத்தான் தோன்றினாள். சாந்தா குறிப்பிட்ட அழகி இவளாகத்தான் இருக்கும் என்று அவர் மனம் பேசியது. -