பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உள்ளுர் ஹீரோ


சிவபுரம் சின்னப்பண்ணையார் சிங்காரம் நடித்த சினிமா வெளியாகிவிட்டது என்ற செய்தி சிவபுரம் வாசிகளுக்கு பரபரப்பு அளித்தது. அந்தப்படம் நம்ம ஊருக்கு எப்போ வரும்? இதுதான் அனைவரது கவலையும் ஆயிற்று.

அந்த நல்ல நாளும் விரைவிலேயே வந்தது.

'நம்மூர் சின்னப்பண்ணையார் நடித்த அற்புதமான படம்' என்று அச்சடித்த விளம்பரத் தாள்கள் சுவர்களை அழகு செய்தன. தட்டிகளில் மினுங்கின. பஸ்களில் பளிச்சிட்டன.

அவை குறிப்பிட்டிருந்த தேதியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள் சிவபுரம்காரர்கள்.

அவர்களுக்குப் பெருமையாவது பெருமை! அளக்க முடியுமா அதை?

'நம்ம பண்ணையார் நடிச்சபடம் வருது.” '

'சின்னப் பண்ணை சக்கைப்போடு போட்டிருப்பாரு. பாத்திடவேண்டியது தான்.”

'பின்னே நாடக மேடையிலே ஜமாய்த்து ஒகோன்னு பேர் வாங்கியவராச்சே! சினிமாவிலே கேட்கணுமா?

இந்த விதமான பேச்சு தெருக்களிலும் டீக் கடைகளிலும், பஸ் நிலையத்திலும், எங்கும் எப்போதும் அடிபட்டுக் கொண்டிருந்தது. அந்த அளவுக்கு சிவபுரம் வட்டாரத்தில் தனது கீர்த்திக் கொடியை நிலை நாட்டியிருந்தார் சின்னப்பண்ணையார் சிங்காரம்.

சினிமாவில் நடித்து தனது புகழ்க்கொடியை மேலும் பறக்கவிட வேண்டும் என்ற ஆசை அவருக்கு ரொம்பகாலமாக இருந்தது. அதற்காகவே அவர் தன்னை தயார்படுத்தி வந்தார்.

சிங்காரத்துக்கு படிக்கிற காலத்திலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட ஆண்டு விழாவின்போது ஸ்கூல் டிராமாவில் அவர் முக்கிய வேடம் தாங்கி நடிப்பது வழக்கம்.