பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296 வல்லிக்கண்ணன் கதைகள்

பூவுலிங்கம் பட்டணத்தை, அதன் பரபரப்பை, வெளிச் சத்தை, மினுமினுப்பை, பகட்டை, படாடோபத்தை எல்லாம் எண்ணினார். இந்த வேளையில் நாகரிகப் பெருநகரம் எப்படிக் கோலாகலமாக இருக்கும் என்று நினைத்துப் பெருமூச்சு எறிந்தார்.

பட்டணத்தின் போலித்தனமான வாழ்க்கை அவருக்குப் பிடித்திருக்கவில்லை. அதேபோல், இருண்ட கிராமத்தின் சமாதிநிலை வாழ்வும் அவருக்கு உகந்திருக்கவில்லை.

பட்டனத்தில் - நாகரிக நகரங்களில் - ஆத்மா இல்லாத வாழ்க்கைதான் கூத்தடிக்கிறது. ஆத்மா மறக்கப்படுகிறது, அமுக்கி அழுத்தப்பெறுகிறது, சித்திரவதை செய்யப்பட்டு வருகிறது என்பது பூவுலிங்கத்தின் அனுபவம்.

அவருடைய நினைவிலும் கனவிலும் மோகனமாகக் கொலுவிருந்த சிறுகுளம் கிராமம் மனிதனுக்கு மாண்பு தரும் ஆத்மாவை கெளரவிப்பதாக - ஆத்ம ஒளி பெற்றதாக - விளங்கும் என எண்ணியிருந்தார். அங்கு ஆத்மா வறண்ட வெறுமையைக் கண்டதும் அவர் நெஞ்சில் வேதனை ஏற்பட்டது. அவருடைய ஏமாற்றம் கொடியதாய், ஈடு செய்ய முடியாததாய், அவரை வருத்தியது. ஏதோ பேரிழப்பை ஏற்க நேர்ந்தது போல் அவர் சோகம் அடைந்தார்.

'இந்த ஊர் இப்படி மாறியிருக்கும் என்று தெரிய வழி இருந்திருக்குமானால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். இந்த ஊருக்கு வந்ததனால், இதன் உண்மை நிலையை அறிய நேர்ந்த துக்கம் வேறு. என் மனசில் பதிந்திருந்த பசுமைச் சித்திரம் சிதைந்து விட்ட நஷ்டம் வேறு!' என்று அவர் எண்ணினார்.

சிறுகுளத்தின் நிகழ்கால நிலையை நேரில் பார்க்காமல் இருந்தாலாவாது, மனம் பழைய அடிப்படையை வைத்து இனிய வேலைப்பாடுகள் செய்துகொண்டிருக்கும் அல்லவா? தனது கனவை, கற்பனையை தானே கொன்றுவிட்டதாக அவர் வருத்தப்படலானார். - -

சிதைந்து சின்னாபின்னமாகிவிட்ட சிறு பிராய நினைவுகளின் இடிபாடுகள் மத்தியில் அழுகுணிச் சித்தராய் வெகுநேரம் நிற்கவும் திரியவும் அவர் உள்ளம் இடம் தரவில்லை. ஆகவே பூவுலிங்கம் உடனடியாக திரும்பும் பயணத்தைத் தொடங்கி விட்டார். இப்போது அவர் உள்ளத்தில் உவகை இல்லை, உணர்ச்சித் துடிப்பும் தவிப்பும் இல்லை, ஆசைப் பட்பட்ப்பு இல்லை, அவசரப் பரபரப்பும் இல்லை. தனக்கு மிகவும் நெருங்கிய ஒருவரை அல்லது ஒன்றை, பறிகொடுத்துவிட்டு, ஆற்ற முடியாத துயரத்தோடு திரும்புகிற ஒரு மனிதனின் வேதனைச் சுமைதான் அவர் உள்ளத்தில் கனத்தது.

0 0 0 ('எழுத்தாளன்' 1965)