பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 வல்லிக்கண்ணன் கதைகள்

பற்றியும், சினிமா உலகம் பற்றியும், திரைப்படங்கள் பற்றியும் அவர் கதைத்தார். அவர் நடித்த படம் குறித்தும் பொதுவாக நிறையச் சொன்னார்.

'அதில் நீங்கள்தான் ஹீரோவா? என்று கேட்டார் ஒருவர்.

சினிமாச் சிரிப்பு சிரித்தார் சின்னப் பண்ணை. 'நாமெல்லாம் முதல் சான்சிலேயே ஹீரோ ஆகிவிட முடியுமா!' என்றார் அலட்சியமாக.

'வில்லன் வேஷம்...' என்று ஒருவர் தயங்கித் தயங்கி சொற்களை மென்றார்.

'வில்லன் ஆக்டிலேகூட ஜமாய்க்கலாம். டாப் ஆகக்கூட இருக்கும். ஆனா, நமக்கு வில்லன் ஆக்ட் சரிப்படாது. ஒரு படத்திலே வில்லனாக வந்தால் அப்புறம் வர்ற படங்களிலே எல்லாம் வில்லனாக நடிக்கிற சான்சுதான் கிடைக்கும். நல்ல ரோல்களிலே வரணும்' என்று சிங்காரம் லெச்சர் அடித்தார்.

"காதல் காட்சிகள் உண்டா உங்க படத்திலே?' இது ஒருவர் கேள்வி.

உலகம் தெரியாத ஒரு அப்பாவியைப் பார்ப்பதுபோல் பண்ணையார் அவரைப் பார்த்தார். 'இந்தக் காலத்திலே லவ் ஸீக்குவன்ஸ் இல்லாமல் படம் ஏதய்யா? காதல் காட்சிகள், கனவுகள், பாட்டுகள் எல்லாம் உண்டு படத்திலே’ என்று பொதுப்படையாகப் பேசினார் சிங்காரம். .

அவருக்கு என்ன வேடம், அவர் எப்படி நடித்திருக்கிறார் என்று எவரும் எதுவும் அறிந்துகொள்ள இயலவில்லை, சிங்காரம் பேச்சுகளிலிருந்து. .

அதை தூண்டித் துருவிக் கேட்ட ஒன்றிரு பேர்களிடம்கூட, "படம் வரும். அப்ப பார்த்துக்கிடுங்களேன். என்ன அவசரம்!' என்று சொல்லி, பேச்சை முடித்துவிடுவார் பண்ணையார்.

இதனால் எல்லாம் சிவபுரம் வாசிகளின் ஆசை தூண்டி விடப்பட்டிருந்தது. நம்ம பண்ணையார் நடித்த படத்தை அது வந்த உடனேயே பார்த்துவிட வேண்டியதுதான்! என்று அனைவரும் தீர்மானித்திருந்தார்கள்.

அந்தப் படம் அவர்கள் ஊருக்கே வந்துவிட்டது.

ஊராரின் மனநிலையை அறிந்து வைத்திருந்த தியேட்டர்காரர்களும் 'நம் ஊர் சின்னப் பண்ணையார் சிங்காரம் நடித்த படம்! காணத் தவறாதீர்கள்!” என்று விளம்பரப்படுத்தி விட்டார்கள்.

முதல் காட்சியிலேயே பார்த்துவிட வேண்டும் என்று முண்டி அடித்து மோதிச் சாடினார்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக.