பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 வல்லிக்கண்ணன் கதைகள்

எப்படியாவது ஏதாவது சாதனைகள் புரிந்து, மாமனிதன் என்று தன் பெயரை நிலைநிறுத்திவிட வேண்டும் என்பதே சிங்காரத்தின் எண்ணமாய், ஆசையாய், பெரும் கனவாய் இருந்தது.

ஒருநாள் பாருங்க! இந்த சிங்காரம் திடீர்ப்பிரபலஸ்தன் ஆகியிருப்பான். பத்திரிகைகளில் எல்லாம் அவன் பெயர், படம், பேட்டிகள் வரும். ரேடியோ சிங்காரத்தின் பெருமைகளை ஒலிபரப்பும். தொலைக்காட்சி சிங்காரத்தின் சாதனையை ஒளி ஒலி பரப்பும். அப்ப தெரிந்துகொள்வீங்க. நம்ம சிங்காரம் உண்மையிலேயே பெரிய ஆளுதான் என்கிறதை.

சிங்காரம் "தன் நெஞ்சோடு கிளத்தி" மகிழ்கிற தனிமொழி தான் இதுவும். அபூர்வமாக ஒன்றிரண்டு பேரிடம் இதைச் சொல்லவும் செய்தான். அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இதை சொன்னார்கள். வானத்தை வெல்லப் போகிறவன் என்று சிலர் குறிப்பிட்டார்கள். வானத்தை வளைக்கப் போகிறவன் என்றும், வானத்தை அளப்பவன் என்றும் கேலியாக சொல்லிக்கொண்டார்கள். கடைசியில் அது "வானம் பார்த்தான்" என்ற பெயராக ஒட்டிக்கொண்டது சிங்காரத்தின் மீது.

"அப்படி என்னதான் செய்யப் போறே?" என்று அவனிடமே கேட்டார்கள். "அதுக்காக என்ன ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறே?" என்றும் விசாரித்தார்கள்.

காலத்துக்காக காத்திருக்கிறேன்" என்றான் சிங்காரம். "இப்ப நான் எதுவும் செய்யவில்லை. சமயம் வருகிறபோது என் ஆற்றல் வெளிப்படும்” என்றான்.

“சரியான லூசு' என்று மற்றவர்கள் கருதினார்கள். "மறை கழன்று விட்டது. கூடிய சீக்கிரம் முழுசாகக் கழன்று போகும். அன்று சிங்காரம் இருக்க வேண்டிய இடம் மனநல மருத்துவ மனையே ஆகும்" என்றார்கள். .

சிங்காரம் பைத்தியம் மாதிரி தான் நடந்து கொண்டான். கண்ணாடி முன்நின்று பேசுவது போலவே, தெருவில் நடந்து போகிற போது சட்டென நின்று "இப்படிச் செய்தால் என்ன? என்று கேட்பான். "இதை செய்யலாமா?" என்பான். அடிக்கடி உரத்த குரலில் வெளிப்பட்டுவிடும் அவன் சிந்தனை.

யார் யாரோ எப்படி எப்படி எல்லாமோ செயல் புரிந்து சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துவிடுகிறார்கள். மற்றவர்களை விட அதிகம் தும்மியவன்... ஒரு மணி நேரத்தில் மிக அதிகம் கொட்டாவி விட்டவன். ஒரு நாள் முழுவதும் தன் கை