பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானத்தை வெல்பவன் 51

இரண்டையும் தட்டிக் கொண்டே இருந்தவர். இத்தனை ஆயிரம் தடவைகள் தட்டினார்... மூன்று நாட்கள் ஓயாது பேசிக் கொண்டே இருந்தார்... விடாது சைக்கிள் ஒட்டினார்... எண்ணிக் கையில் மிக அதிகமான இட்டிலிகளை தின்று தீர்த்த சூரர்... ஓயாது நாட்கணக்கில் சிரித்தார். இவ்விதம் சாதனை படைத்தவர்கள் விவரம் பத்திரிகைகளில் வருவதை சிங்காரம் படித்திருக்கிறான்.

நாமும் இதுபோல் ஏதாவது சாதனை புரிந்து காட்ட வேண்டும் என்று சிங்காரம் ஆசைப்பட்டான். ஆராய்ச்சி என்று ஏதாவது செய்யலாம் என்று நினைத்தான். -- r

நாய்க்கு வேலையும் இல்லை. நிற்க நேரமும் இல்லை என்பது பழமொழி. அப்படி ஒரு நாய் வேலை எதுவும் இல்லாமலே ஒரு நாளில் எங்கு எங்கெல்லாம் போகிறது. எப்ப எப்ப ஒடுகிறது. எப்போ நிற்கிறது என்று ஆராய வேண்டும்” என்று எண்ணினான் சிங்காரம். "பளா பளா! இது அருமையான அய்டியா!" என்று ஆரவாரித்தது அவன் மனம்.

இதை சிங்காரம் ஒரு நண்பனிடம் கூறினான். அந்த நண்பன் இவனுக்கு அண்ணன்! வேலை மெனக்கெட்டு பழம் பத்திரிகைகளில் வருகிற துணுக்குச் செய்திகளை எல்லாம் சேகரித்து, வகைப்படுத்தி, வெவ்வேறு ஃபைல் போட்டு, பாதுகாக்கிறவன். அதைப் பெரிய சாதனையாகக் கருதுகிறவன்.

அவன் சொன்னான்: ‘'இது புது ஐடியா ஒண்னுமில்லே. இங்கிலாந்திலே லண்டன் மாநகர் அருகே ஒரு இடத்தில் ஒருவன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு நாளில் ஒரு பசுமாடு, காலையில் எழுந்ததில் இருந்து என்ன செய்யுது, எங்கெங்கே போகுது, எத்தனை தடவை படுக்குது, அப்புறம் எழுந்து எப்படி எங்கெல்லாம் நடந்து திரியுது என்று ஆராய்ச்சி நோக்கில் ஸ்டடி பண்ணி விரிவாக எழுதி வைத்தான். அவன் பசுமாட்டின் செயல்பாடுகளை ஆராய்ந்தான். நீ ஒரு நாயின் நடமாட்டத்தை ஆய்வு செய்ய ஆசைப்படுகிறாய். அவ்வளவுதான்”

சீ என்றாகிவிட்டது சிங்காரத்துக்கு. புரட்சிகரமா ஏதாவது பண்ணவேணும் என்றான். - --

'டிரஸை அவுத்துப் போட்டுவிட்டு ஊர் நெடுக சுத்து! அதுவும் ஒரு புரட்சிதான்" என்று கிண்டல் செய்தான் நண்பன்.

கைகளை ஊன்றி தலைகீழாக நடந்தவன். முதுகு காட்டி (பின்னெக்காட்டி) நடந்து முன்னேறியவன், உருண்டு உருண்டே ஊர் வழி போனவர்கள், தாவித் தாவி நடந்தவர்கள் பற்றி எல்லாம் தகவல்கள் இருக்கின்றன என்று நண்பன் விவரித்தான்.