பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கதைகளைப் பற்றி

“கண்ணாடியில் நம்முடைய முகத்தைப் பார்த்துக் கொள்ள விரும்புகிறோம். அதைப் போலவே நமது அகத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவருக்கும் உண்டாகிறாது. அந்த ஆசையைத் தீர்த்து வைப்பது தான் கலை உலகு என்றும் கண்ணாடி.

வல்லிக்கண்ணன் ஒரு கலைஞன்; உள்ளதை உள்ளபடி எடுத்துக் காட்டும் கண்ணாடியைப் போன்ற தன்மையுடைய கலைஞன். அதன் விளைவாகத்தான் அகத்தின் மூலை முடுக்கும், எல்லைப்புறமும், அடிமட்டமும் அவர் கதைகளுக்கு விஷயமாகின்றன. அதன் விளைவாகத்தான் மனத்தின் அழுக்கும், திருட்டுத்தனமும் அவர் கையில் படாதபாடு படுகின்றன.

நம்முடைய உள்ளத்திலும், சமூகத்திலும் மறைந்து திரியும் உணர்ச்சிகளையும் சூழல்களையும் கண்டு, ‘பின்னால் நிற்காதே, முன்னே வந்து தொலை’ என்று புழுங்கி வெடிக்கும் எண்ண அடிப்படையின் மீதுதான் ஏறக்குறைய எல்லாக் கதைகளை எழுப்பி இருக்கிறார்... கலைத் திறனுடன் சமூக அமைப்பையும், பொருளாதாரத் துறையையும் சில கதைகளில் சோதித்திருக்கிறார்.... கருத்தழகும், உயர் நோக்கும், நடையழகும் நிறைந்த கதைத் தொகுதிக்கு முகவுரை காதற்காக?”

சில வருஷங்களுக்கு முன்பு வெளிவந்த எனது ‘நாட்டியக்காரி’ முதலிய கதைகளின் தொகுதிக்கு இப்படி முகவுரை எழுதியிருக்கிறார் எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய எழுத்தாளர் திரு. த. பிச்சமூர்த்தி அவர்கள். அவரது வார்த்தைகள், இந்தக் கதைத் தொகுதிக்கும் பொருந்தும் என்பதனாலேயே அவற்றை இங்கு எடுத்து எழுதி இருக்கிறேன்.

‘வஞ்சம்’ முதலிய பதினோரு கதைகளைக் கொண்ட இந்தப் புத்தகம் னது கதைகளின் மூன்னுவது தொகுப்பாகும்.