பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

எஸ். எம். கமால்

தோல்வி கண்டவர்.[1] கிளர்ச்சி நடந்த பகுதிகளையும் அங்குள்ள மக்களையும் நன்கு அறிந்தவர். நிலைமைகளை நன்கு தெரிந்து தக்க திட்டங்களுடன் எதிரிக்கும் பலமான இழப்பையும் தோல்வியையும் ஏற்படுத்தக்கூடிய அரசியல் தலைவன். கமுதிக்கோட்டையிலிருந்து பின்வாங்கி, கீழ்க்குளம் காட்டிற்குள் அவர் சென்றிருக்கக் கூடாது. தொடர்ந்து வரும் எதிரியை சரியான முறையில் தெரிந்துகொள்ள இயலாது. சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்டதுபோல் ஆகிவிட்டதே; அவரது அணிக்கு மரண அடி கொடுத்த எட்டப்பனது சிப்பாய்களும் மருது சேர்வைக்காரர்களின் படைகளும் முதுகுளத்துார் மறவர்களைவிட எந்த வகையில் உயர்ந்தவர்கள்? வாள்வீச்சிலா? வேல் பாய்ச்சலிலா? அல்லது துப்பாக்கி சுடுவதிலா? என்ன இருந்தாலும் மயிலப்பன் பிறந்த மண்ணைச் சேர்ந்த சித்திரங்குடி நாட்டாரும், ஆப்பனுர் தேவர்களும் அவனுக்கு எதிரான அணியில் சேர்ந்து இவ்விதம் துரோகம் செய்திருக்கக் கூடாது...

இப்படி எத்தனையோ கேள்விகளை சேதுபதி மன்னர் தமக்குள் தொடுத்துக்கொண்டு விடையும் சொல்லிக்கொண்டார். தமது சீமையில், இத்தகைய இழிநிலை ஏற்பட சிவகங்கை சீமை சேர்வைக்காரர் படை உதவி வழங்கியதுடன், போரிலும் பரங்கியருக்கு பக்க பலமாக இருந்ததை[2] நினைக்க மன்னரது சிந்தனையெல்லாம் சினத்தால் கொப்பளித்தது. இப்பொழுதே புறப்பட்டுப்போய் அந்த சின்ன மருதுவை...எதிரே பலமான சிறைக்கதவுகள் இருப்பதை அப்பொழுது அவர் உணர்ந்தார்.

சிறைக்கதவுகள்-மனிதனது எல்லையற்ற கற்பனையோடு இயைந்த உணர்வு இழைகள், எண்ணங்கள், ஆசைகள், இலட்சியங்கள்-இவைகளுக்கான இயக்கங்கள் அனைத்தையும் தனது வலிய குறுக்குச் சட்டங்களினால் குலைத்துத் தடுத்துவிடும் ஆற்றல் சிறைக்கதவுகளுக்கு மட்டும்தான் உள்ளது. அதிகார பலம்கொண்டு ஆட்சி செய்தவர்கள், ஆன்ம வலிமை கொண்டு


  1. Board of Revenue Proceedings, Vol. 226 (2-5-1799), pp. 3782-86.
  2. Madurai Collectorate Records, Vol. 1122 (1799), 25–5–1799.