உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

131

கொடுமைகளைச் சாடி, சமுதாய நீதி கோரியவர்கள், அவர்கள் எத்தகையவராய் இருந்தாலும் சிறைக்கதவுகளுக்குப் பின்னால் அவைகளின் ஆற்றலை எதிர்த்து எக்காளமிட முடியாதவாறு நம்பிக்கை இழந்தவர்களாக அடங்கி ஒடுங்கி விடுகின்றனர். இவர்களில் ஒரு சிலரை மட்டும் தியாகி என வரலாறு வாழ்த்து கிறது.

சேது மன்னரின் சிறை வாழ்க்கை சாரமற்றதாக கழிந்து கொண்டிருந்தது. என்றாலும் அவரது தன்னம்பிக்கையும், திடமான உறுதியும் உடைந்து விடவில்லை. எப்பொழுதாவது இராமனாதபுரத்திலிருந்து சேவகர்கள் செய்தி கொண்டு வருவார்கள். அவரது குடும்பத்தினர் பற்றியும், அருமை மகள் சிவகாமி பற்றியும், அவர்கள் தெரிவிக்கும் விவரங்களைக் கேட்டு, அவரது உள்ளத்தில் ஏற்படும் சலனங்கள், இனிமை, ஏக்கம் ஏமாற்றம் ஆகிய உணர்வுகள்-நெளிந்து மறையும் நீர்க்கோடுகளைப் போல் அவர் முகம் பிரதிபலிக்கும். தொடர்ந்து வேதனைப் பின்னல்கள், விரக்தியான தோற்றம், இதுவே அவருடைய அன்றாட சிறை வாழ்க்கையாக இருந்தது.

О О О О О

தஞ்சைத் தரணியில் தலைமறைவாக இருந்த தளபதி மயிலப்பன், மறவர் சீமைக்குத் திரும்பினார். அவரையும் அவரது கிளர்ச்சி ஆதரவாளர்களையும் அடக்கி ஒடுக்க முன்பு கும்பெனியாருக்கு சிவகங்கைப் படைகளைக் கொடுத்து உதவிய மருது சகோதரர்கள், இப்பொழுது மயிலப்பனை, தங்களுக்கு பக்கபலமாக, பரங்கியருக்கு எதிரான புரட்சித் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். மயிலப்பனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. அவரது மனத்தில் மங்காது ஒளிர்ந்து கொண்டிருந்த மறவர் சீமைப் பற்றிய விடுதலைக் கனவுகள் மகிழ்ச்சி அளித்தன. மருது சேர்வைக்காரர்கள் மீது கொண்டிருந்த பகைமையை மறந்து, பொதுஎதிரியான பரங்கியரை அழிக்க, அவர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவரது தாக்குதல்கள் இப்பொழுது மிகவும் கடுமையானதாக இருந்தது. பரங்கிகளது குறிப்புகளில் மயிலப்பனுக்கு முரடன் (Rogue) என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. அவரது பேராற்றலையும் பகைவரைச் சின்னாபின்னப்