பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 132


நடுநிலையுடைய தீர்ப்பும் இயலாத காரியங்கள் ஆக்கப்பட்டுவிடுகின்றன. அத்தகைய மனிதன் தன் நோக்கத்தின் தொடர்பையோ இருப்பதாகத் தான் கற்பனை செய்கின்ற தொடர்பைக் கொண்டே ஒவ்வொரு காரியத்தையும் காண்கின்றான். அதே வேளையில், சிந்தனையாளன் காரியங்களை அவையுள்ளவாறே காணுகின்றான், இயற்பொருளை நேருக்குநேர் காணத் தகுதியுடையவனாகும் வகையில் தப்பெண்ணத்தினின்றும், தானெனும் அகந்தையின் சிறுமைகளினின்றும் தன் மனத்தைத் தூய்மைப் படுத்திக் கொள்கின்ற மனிதன் ஆற்றலின் உச்சியை அடைந்தவனாகின்றான். அவன் தன் கைகளுக்குள் பெருமளவு செல்வாக்கை வைத்துக் கொண்டிருப்பவனாகின்றான். அவன் அறிந்திருப்பினும் இல்லையெனினும் இந்த ஆற்றலை அவன் கையாண்டே தீருவான். அஃது அவனுடைய வாழ்வினின்றும் பிரிக்கப்பட இயலாததாகிவிடும். மலரினின்றும் மணம் கமழுவது போன்று அஃது அவனிடமிருந்து தோன்றும் அவனுடைய சொற்களில், செயல்களில், உடல் தோற்றங்களில் மன இயக்கங்களில், என் அவனுடைய அமைதியிலும், உடலமைப்பின் அசைவின்மையிலும் அது மிளிரும். அவன் எங்குச் செல்வதாயினும், அவன் பாலைவனத்திற்குப் பறப்பதாயினுங்கூட இந்த மிக உயர்ந்த, விதியிலிருந்து அவன் தப்ப இயலாது. எனெனின், பெரிய சிந்தனையாளன் உலகத்தின் மையமாவான். அவனாலேயே மனிதர் அனைவரும் தத்தமது கோள் வழியில் நிறுத்தப்படுகின்றனர்; சிந்தனை அனைத்தும் அவனை நோக்கியே மைய ஈர்ப்புக் கொள்கின்றன.