பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 14


ஒரு முடிவிற்கு வருவதற்குத் தோற்றங்கள் எத்துணைதான் எதிராயிருப்பினும், மக்கள் வெற்றியென அழைக்கும் சிறப்பை முடி சூடுகின்ற ஒவ்வொரு முயற்சியையும் அவையே உருவமைத்து நிலைப்படுத்துகின்றன.

ஒப்பிட்டுப்பார்க்கும்போது இந்த எட்டு அறங்கள் அனைத்தையும் அவற்றின் முழுமையான, நிறைவான நிலையில் வெற்றிவாய்ப்புள்ள ஒருசில மக்களே கைக்கொண்டொழுகுகின்றனர் என்பது உண்மையே. அவ்வாறு செய்பவர்கள் இருக்கவே செய்கின்றனர்; அவர்களே தலைவர்கள், ஆசிரியர்கள், மனித வழிகாட்டிகள், மனிதச் சமூக ஊன்றுகோல்கள், மனித இன வளர்ச்சி அணியின் வலிமைவாய்ந்த முன்னோடிகள்.

ஒரு மனிதனுடைய ஒழுக்கவரம்புகள் அவனடையும் வெற்றியின் வரம்புகளைக் குறித்து விடுகின்றன. எனவே, ஒருவனுடைய ஒழுக்கத் தகுதியைத் தெரிந்து கொள்வதே, அதைக் கணிதப்படி மதிப்பீடு செய்வதே, அவனுடைய இறுதியான வெற்றியையோ தோல்வியையோ தெரிந்து கொள்வதாகும். ஒழுக்கத்தூண்களால் தாங்கப்படுவது வரையில்தான் ஆக்கமெனும் கோயில் நிலைபேறு கொள்ள முடியும்; அவை வலுவிழந்துவிடின், அது இடர் சூழ்ந்ததாகி விடுகின்றது. அவை பின்னிழுக்கப்பட்டு விட்டால் அது அழிந்து மடியும்படி அசைந்தாடிச் சாம்பலாகிவிடுகின்றது.