பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 38


செல்வாக்காகவோ, மகிழ்ச்சியாகவோ, வாய்ப்பாகவோ வாழ்வாகவோ தந்து விட வையகம் எப்போதும் ஆயத்தமாக நிற்கின்றது. நாம் எந் நிலையுடையரேனும் சரியே, எவ்வித ஐயமோ நம்பிக்கைக் கேடோ இன்றி மிகச் சிறந்தவற்றை உலகிற்கு அச்சமிற்றி வழங்கலாம் நமது அக்கறையின் அழிக்க முடியாத முத்திரை ஒரு முறை நம் சரக்குகளின் மீதோ மற்றொருமுறை நம் சொற்களின் மீதோ பொறிக்கப்படுமேயாயின், நமது வாணிபம் தழைத்துச் செழிக்கும், அல்லது நம் வாய்மொழிகள் நிலைத்து வாழும்.

அக்கறையுடைய மக்கள் தமது உழைப்பு, குணவியல்பு ஆகிய இரண்டிலும் நல் விளைவான முன்னேற்றம் காணுகின்றனர். எனவே, அவர்கள் வாழுகின்றனர், தடைப்பட்டுத் தேங்கி நிற்றலே இறப்பு இடையறாத முன்னேற்றமும், என்றும் மேலோங்கும் மேன்மையும் எங்குளவோ அங்கு முயற்சியும், வாழ்வும் தேக்கத்தையும், இறப்பையும் விழுங்கிவிடுகின்றன.

எனவே, முதல் அடிப்படையின் அமைப்பும், வேலைப்பாடும் விளக்கப்பட்டுவிட்டன. அதை நன்கு கட்டி முடித்து உறுதியாகவும், நேராகவும் நிலைப்படுத்துபவன் தனது வாழ்வெனும் வாணிபத்தில் வலிமை வாய்ந்ததும், நிலைபெறுவதுமான அடிப்படை கொண்டவனாவான்.