பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 40


இருக்கின்ற மெய்யான சிக்கனத்தின் சடப்பொருள் சார்ந்த ஓர் அடையாளமெனலாம். செல்வநிலைச் சிக்கனக்காரன் செம்பிற்கு வெள்ளியும், வெள்ளிக்குப் பொன்னும், பொன்னிற்குப் பணத்தாள்களுமாகப் பரிமாற்றம் செய்து பணத்தாள்களை வங்கிக் கணக்கில் எண்களாக மாற்றி விடுகின்றான். பணத்தை இவ்வாறு மிகவும் விரைவாகக் கை மாற்றத்தக்க உருவங்களில் மாற்றிக் கொள்வதால் தன் காரியங்களின் பொருளாதார நிருவாகத்தில் அவன் பயனடைகிறான்.

பருப்பொருளியலிலே மனவியலிலோ காரியங்கள் அனைத்திலும் பாழ்படுதல், பயனின்றிக் குவித்துவைத்தல் இவைகளுக்கிடையேயுள்ள நடுத்தரமான பாதையே உண்மையான சிக்கனமாகும். பணமாயினுஞ் சரி, மனவாற்றலாயினுஞ் சரி வீணாக்கப்படுகின்ற ஒன்று ஆற்றலற்றதாக ஆக்கப்பட்டு விடுகின்றது. செல்வ நிலையிலோ மன நிலையிலோ ஆற்றலைப் பெற வேண்டுமெனின் அது தொகுக்கப்படத்தான் வேண்டும்; ஆனால் முறையாகப் பயன்படுத்துவதும் சேகரிப்பைப் பின்தொடர வேண்டும். பணத்தையோ ஆற்றலையோ சேகரிப்பது கருவியே; பயன்படுத்துவதே செயலின் வெற்றி. மேலும், பயன்படுத்துதலே ஆற்றலை உண்டு பண்ணுகின்றது.

கீழ்க்காணும் ஏழு செயல்களிலும் நடுநிலையான பாதையைக் கண்டு பிடிப்பதிலேயே பல்வகையான சிக்கனமும் அடங்கியிருக்கின்றது. அவை பணம், உணவு, உடை, பொழுதுபோக்கு, ஓய்வு, காலம், ஆற்றல்.