பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

ஜேம்ஸ் ஆலன்


தீர்க்கத்தின் கண் அவனுடைய வலிமை காணக்கிடக்கின்றது; மதிப்பு, பாராட்டு, வெற்றி இவற்றைப் பணிக்கின்ற தீர்க்கமாகும் அது.

வெல்லக் கூடாமை : ஒரு மேம்பட்ட பாதுகாப்பாகும்; ஆனால், நிறைவான தூய்மையும், அழிக்க முடியாத சால்புமுடைய மனிதனையே அது காக்கின்றது. மிகமிகச் சிறு திறமான நுட்பத்திலும் கூடச் சால்பின் நியதியை என்றுமே மீறாதிருத்தலாவது, மறைமுகக் குத்தல் பேச்சு, அவதூறு, பொய்யான விளக்கம் இவற்றின் தாக்குதல்கள் அனைத்தும் தன்னை வெல்லக் கூடாத நிலையிலிருப்பதாகும். இவற்றில் ஒரு பகுதியிலே யாயினும் தோல்வியுற்று விடுகின்ற மனிதன், ஊறுபடத்தக்கவனேயாவான்; கண்ணனின் குதிகாலில் பாய்ந்த அம்பைப் போன்று தீமையெனும் அம்பு அப்பகுதியில் புகுந்து அவனைக் கீழே வீழ்த்திவிடும். தூய்மையானதும், நிறைவானதுமான சால்பு, தாக்குதல், ஊறு அனைத்திற்கும் எதிரான சான்றாகும்; அதனைக் கொண்டிருப்போர் எதிர்ப்பு, கொடுமை அனைத்தையும் அச்சமில்லாத் தீரமுடனும், விழுமிய உள்ளச் சமநிலையுடனும் பெற வகை செய்கின்றது.

உன்னதனமான ஒழுக்க விதிகளை மெய்யறிவுடன் ஏற்றுக் கைக்கொண்டொழுகுவதினின்றும் பிறக்கின்ற உள்ள ஆற்றலையும், மன அமைதியையும், எத்துணையளவு திறமையும், அறிவாற்றலும் அல்லது வாணிப மதிக் கூர்மையும் தர இயலாது. ஒழுக்க ஆற்றலே உயர்ந்த ஆற்றலாகும். உண்மையான ஆக்கத்தை நாடுபவன் இவ் ஆற்றலை கண்டறியட்டும்; தன் மனத்திலும், தன்